மோடியின் “புனித பசு” அதானி.. அதை கட்டிப்பிடித்து “கவ் ஹக் டே” கொண்டாடுவார்! உத்தவ் சிவசேனா விமர்சனம்
அதானி நிறுவன பங்கு மோசடி தொடர்பாக பேசாத பிரதமர் நரேந்திர மோடியின் புனித பசு அதானி என்று மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சாம்னா பத்திரிகை விமர்சித்து உள்ளது.
மும்பை: தொழிலதிபர் அதானி ஷெல் நிறுவனங்கள் மூலம் தனது நிறுவன பங்குகளை உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதாக ஹிட்டன்பெர்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால் அதன் பங்குகள் கடும் சரிவை சந்தித்து இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புனித பசு அதானி என்று மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவின் சாம்னா பத்திரிகை விமர்சித்து உள்ளது.
பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அதாவது காதலர் தினம் கொண்டாடப்படும் அதே பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று இந்தியாவில் Cow Hug Day எனப்படும் பசு தழுவுதல் தினத்தை கொண்டாட அழைப்பு விடுத்தது.

பசு தழுவல் தினம்
இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் விலங்குகள் நல வாரியத்தின் இந்த அறிவிப்பை விமர்சித்தும், கேலி செய்தும் மீம்கள் வெளியாகின. காதலர் தினத்தை மறைமுகமாக எதிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக பலர் விமர்சித்தனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பை கைவிடுவதாக நேற்று விலங்குகள் நலவாரியம் தெரிவித்தது.

உத்தவ் சிவசேனா விமர்சனம்
இந்த நிலையில், அதானி நிறுவன சர்ச்சை மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் முடிவை ஒப்பிட்டு சிவசேனா (உத்தவ் தாக்கரே) தரப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை விமர்சித்து எழுதப்பட்டு இருக்கிறது.

அதானி பற்றி பேசாத மோடி
அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, "எதிர்க்கட்சிகள் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரதமர் ஒரு வரி கூட அதானி பற்றி பேசவே இல்லை. ஆனால் மக்களை மீண்டும் அமைதியாக்க மோடி அரசு மதத்தை எடுத்து இருக்கிறது. அதானி பற்றி நாடாளுமன்றத்தில் பேசாத மோடி அரசு பசு மாடு குறித்து பேசுகிறது.

மோடியின் புனித பசு
பங்கு சந்தையின் பெரிய எருது அதானி. ஆனால், அவர் பிரதமர் மோடியின் புனிதமான பசு. அதை பிரதமர் தழுவி இருக்கிறார். அவர் அதன் பிடியை தளர்த்த தயாராக இல்லை. இந்த ஆண்டு பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களவை தேர்தலுக்கும் இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கிறது.

பாஜக ஆட்சி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் நாட்டில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே ராமர் கோயில், பசு மாடுகளை வைத்து அவர்கள் பொதுமக்களிடம் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கின்றனர்." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications