தமிழ்நாடு, ராஜஸ்தான் வரிசையில் மகாராஷ்டிரா: 'நீட்' அச்சம்- மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை!
மும்பை: தமிழ்நாடு, ராஜஸ்தான் வரிசையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை சம்பவங்கள் தொடருகின்றன.
நாட்டின் ஒவ்வொரு மாநிலும் ஒரு பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன. சிபிஎஸ்இ எனப்படும் ஒரு பாடத்திட்டம் இந்தியாவுக்கு பொதுவானதாக இருந்தாலும் பெரும்பாலான மாநிலங்கள் இதனை பின்பற்றுவதில்லை.

இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் நுழைவுத் தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்து மிக அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களால் நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற முடியாமல் போகிறது. இந்த விரக்தியால்தான் அரியலூர் அனிதா தொடங்கி ராஜஸ்தான் கோட்டா வரை மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடருகின்றன.
இதனால்தான் நீட் தேர்வுக்கு விலக்கு தரக் கோரி தமிழ்நாடு உரத்து குரல் எழுப்புகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் நீண்டகாலம் இதனை கிடப்பில் போட்டு வைத்தார். பின்னர் ஒருவழியாக ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பினார். இருந்த போதும் ஜனாதிபதியின் ஒப்புதல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது என்பது ஆளும் திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதி. இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் திமுக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டும் வருகிறது.
தமிழ்நாட்டில் அரியலூர் அனிதா முதல் தாம்பரம் ஜெகதீஷ் வரை 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதேபோல ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் புற்றீசல் போல பெருகிக் கிடக்கும் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த வரிசையில் மகாராஷ்டிராவும் இணைந்திருப்பதுதான் பெரும் துயரம்.
மகாராஷ்டிராவின் நாக்பூர் மன்காப்பூர் பகுதியை சேர்ந்த மொயின் சேக் நவ்சாத் என்ற மாணவர் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். இந்த மாணவர் திடீரென நீட் தேர்வு பயிற்சி மையத்தின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications