ஒரே வாரத்தில் ஓராயிரம் ட்விஸ்ட்கள்! ஒன்றாக இணையும் "பவார்கள்!" மகாராஷ்டிராவில் பவர் காட்ட முடியுமா?
மும்பை: மகாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட 29 உள்ளாட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அங்கு மிகப் பெரிய ஒரு அரசியல் ட்விஸ்ட் நடைபெற இருக்கிறது. சில ஆண்டுகளாகவே தனித்துப் பயணித்து வந்த சரத் பவாரும், அஜித் பவாரும் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் எனச் சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிராவில் அரசியல் களம் நொடிக்கு நொடி மாறி வருகிறது. அங்குச் சமீபத்தில் தான் உள்ளாட்சித் தேர்தல்களில் முதல்கட்டம் முடிவடைந்தது. இதில் பாஜக மிகப் பெரியளவில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தச் சூழில் தான் அங்கு இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. மொத்தம் 29 உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக 74 ஆயிரம் கோடி பட்ஜெட் கொண்ட மும்பை புனே உள்ளிட்ட முக்கிய நகராட்சிகளுக்குத் தேர்தல் நடக்கிறது.

இணையும் பவார்கள்
உள்ளாட்சித் தேர்தல் என்பதால் ஏற்கனவே முதற்கட்டத் தேர்தலிலேயே என்டிஏ கூட்டணியில் இருந்த பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் என்சிபி தனித்தே போட்டியிட்டன. இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பெரிய ட்விஸ்ட் நடக்கப் போகிறது. அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு சரத் பவாரும், அஜித் பவாரும் தனித்தே பயணித்து வரும் நிலையில், அவர்கள் இணையும் நிலை உருவாகியுள்ளது. இன்று பிற்பகலில், புனே மாநகராட்சிக்கான இடப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை சரத் பவாரும், அஜித் பவாரும் இறுதி செய்யும் நிலையில் இருந்தனர்.
பிரிவு
2023 ஜூலையில் தனது சித்தப்பா சரத் பவாரை விட்டுப் பிரிந்து, 18 என்சிபி எம்எல்ஏகளுடன் பாஜக கூட்டணியில் ஐக்கியமானார் அஜித் பவார். அங்கு அவருக்குத் துணை முதல்வர் பதவியும் தரப்பட்டது. எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. ஆனால், சமீபத்தில் என்டிஏ கூட்டணியில் நடக்கும் சிவ விஷயங்கள் அஜித் பவாரை ஓரங்கட்டுவது போல அமைகிறது.
அஜித் பவார்
அதாவது மும்பை உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மாஜி அமைச்சர் நவாப் மாலிக்கை முன்னிறுத்த அஜித் பவார் முயன்றார். இருப்பினும், பாஜக அதை ஏற்கவில்லை. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் மாலிக்குக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதையே பாஜக காரணமாகக் கூறியிருக்கிறது. இருப்பினும், நவாப் மாலிக்கை முன்னிறுத்தினால் தனது இந்துத்துவ வாக்குகள் பாதிக்கப்படும் என பாஜக கருதியதே இதற்கு உண்மை காரணம் என்று சொல்லப்பட்டது.
சரத் பவார்
மறுபுறம் சரத் பவாரும் இந்தியா கூட்டணியில் இக்கட்டான நிலையில், இருக்கிறார். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே மறைவுக்குப் பிறகு 20 ஆண்டுகளாகப் பிரிந்து இருந்த உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இருப்பினும், ராஜ் தாக்ரேவின் மராத்தி முழக்கமும் தீவிர இந்துத்துவச் செயல்பாடுகளும் இதர கூட்டணிக் கட்சிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே காங்கிரஸ் அங்குத் தனித்துப் போட்டியிட முடிவு செய்துவிட்டது. பால் தாக்கரேவுடன் இணைந்து கூட்டணி அமைக்க சரத் பவாரும் தயங்குகிறார்.
இந்தச் சூழலில் தான் சரத் பவாரும் அஜித் பவாரும் கூட்டணி அமைக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 29 உள்ளாட்சிகளிலும் கூட்டணி அமைக்கவில்லை என்ற போதிலும், புனே உள்ளிட்ட முக்கியமான சில உள்ளாட்சிகளில் கூட்டணி அமையும் என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications