பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு கார் பரிசளிக்கிறார் ஆனந்த் மகிந்திரா.. என்ன மாடல் தெரியுமா?
மும்பை: செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு காரை பரிசளிக்கவுள்ளதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் 18 வயது பிரக்ஞானந்தா. இவர் வேலம்மாள் பள்ளியில் படித்து வருகிறார். இவரது தாய் நாகலட்சுமி. இவர்தான் தனது மகனை அனைத்து இடங்களுக்கும் கூட்டி சென்று அவர் இன்று இந்த உயரத்தை அடைய உறுதுணையாக நிற்கிறார்.

தனது மகன் செஸ் சாம்பியனாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் எளிதான தோற்றத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். பார்ப்போர் அவரை தாய் ஸ்தானத்தில் பார்க்கும் அளவுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்.
அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் கடந்த வாரம் உலக கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனிடம் தோல்வி அடைந்தார். கடைசி வரை இவர் உலக சாம்பியன் ஆவார் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தோல்வி அடைந்தார்.

எனினும் இந்த சிறிய வயதில் இறுதி போட்டி வரை வந்ததே இந்தியாவுக்கு பெருமையான விஷயம்தான். அதிலும் தமிழகத்திற்கு பெரும் பெருமையை சேர்த்துவிட்டார். இவருக்கு பரிசுத் தொகையாக 66 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது பிரக்ஞானந்தாவுக்கு காரை பரிசளிக்கலாமே என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ் யூவி 400 இ.வி. காரை பரிசாக அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரக்ஞானந்தாவுக்கு பலரும் காரை பரிசளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவர்களது உணர்வு எனக்கு புரிகிறது. ஆனால் என்னிடம் மற்றொரு யோசனை உள்ளது. வீடியோ கேம்களின் மோகம் அதிகரித்துள்ள போதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி அவர்கள் இந்த விளையாட்டை தொடர அவர்களுக்கு ஆதரவு அளிப்பதை ஊக்குவிக்க விரும்புகிறேன்.
இது எலக்ட்ரிக் கார்களை போலவே நம் பூமிக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் முதலீடு ஆகும். எனவே பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ் யூவி 400 இ.வி. காரை பரிசளிக்க வேண்டும் என நினைக்கிறேன். பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி, ரமேஷ் பாபு ஆகியோர் தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்து அயராத ஆதரவை தந்தமைக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இந்த காரின் விலை 15 லட்சத்திலிருந்து 19 லட்சம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications