பரபரப்பு! ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கு.. முக்கிய சாட்சி திடீர் மரணம்! நடந்தது என்ன.. பின்னணி
மும்பை: ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கு தொடர்பான வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்டவர் திடீரென மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு அக். 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடைபெறுவதாக என்சிபி அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் ரகசியமாக ஏறினர். அந்த சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடப்பதைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் உறுதி செய்தனர்.

மும்பை சிறப்பு நீதிமன்றம்
இந்த விவகாரத்தில் முதலில் 10 பேரை தடுப்பு காவலில் வைத்த என்சிபி அதிகாரிகள், பின்னர் அவர்களில் பலரைக் கைது செய்தனர். குறிப்பாகப் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானை கப்பலில் வைத்தே என்சிபி கைது செய்தது. இந்த வழக்கில் முதலில் ஜாமீன் கோரி அவர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், ஆர்யன் கானின் வாட்ஸ்அப் சாட்கள் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியது உறுதி செய்யும் வகையில் உள்ளதாகக் கூறி மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.

ஜாமீன்
இதையடுத்து ஆர்யன் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த மும்பை உயர் நீதிமன்றம், ஆர்யன் கான் போதை மருந்து பயன்படுத்தியதற்கு உரிய ஆதாரம் இல்லை என்று கூறி ஆர்யன் கான் உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் சுமார் 22 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான், அதன் பின்னரே ஜாமீனில் விடுதலையானார்.

உயிரிழந்தார்
இந்நிலையில், ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்கில் என்சிபி சாட்சியாக இருந்த பிரபாகர் சைல் என்பவர் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "37 வயதான பிரபாகர் சைல் போதைப் பொருள் வழக்கில் சாட்சியாக இருந்தார். இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

சந்தேகம் இல்லை
இதையடுத்து மும்பை காட்கோபரில் உள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார், இருப்பினும், அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார்" என்றார். பிரபாகர் சைல் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார் என்றும் அவரது மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் எதுவும் சந்தேகம் தெரிவிக்கவில்லை என்றும் பிரபாகர் சைலின் வழக்கறிஞர் துஷார் கந்தாரே தெரிவித்தார்.

முக்கிய சாட்சி
என்சிபி சாட்சியான கேபி கோசாவியின் காப்பாளர் என்று தன்னை கூறி கொண்ட பிரபாகர் சைல், போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பிறகு, அவரை விடுவிக்க கேபி கோசாவியிடம் ரூ 25 கோடி டீல் பேசப்பட்டதை தான் கேட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும், அவர் பிறழ் சாட்சியாக மாறிவிட்டதாகச் சமீபத்தில் என்சிபி அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

விசாரணைக்கு உத்தரவு
ஆர்யன் கான் வழக்கிலேயே என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் பிரபாகர் சைலின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் "வலிமையாக மற்றும் ஆரோக்கியமாக இருந்த அவர் எப்படி திடீரென்று உயிரிழக்க முடியும்? இது குறித்து விசாரணை நடத்தப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications