மும்பை மின்சார ரயிலில் திடீரென ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர்.. மக்களுடன் மக்களாக பயணித்து அசத்தல்
மும்பை: மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், திடீரென இன்று மும்பை மின்சார ரயிலில் பயணித்து ஆய்வு செய்தார்.
Recommended Video
கடந்த ஆண்டு ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் அஸ்வினி வைஷ்ணவ். 51 வயதாகும் இவர், ஒடிசா 1994 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
ஒடிசாவில் கடந்த 1999 மோசமான புயல் ஏற்பட்ட போது அதில் உயிரிழப்புகளைத் தடுத்ததில், அஸ்வினி வைஷ்ணவ்வின் பங்கு முக்கியமானது. இவர் கடந்த 2003ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தனி செயலாளராகவும் இருந்துள்ளார்.

மத்திய அமைச்சர்
இந்நிலையில், மும்பை புறநகர் ரயில் நெட்வொர்க்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கூடுதல் ரயில் பாதைகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். இதற்காக அவர் தானே மற்றும் திவா நிலையங்களுக்கு இடையே உள்ள மின்சார ரயிலில் பயணிகளுடன் இணைந்து அவர் பயணம் செய்தார். தானே மற்றும் திவாவை இணைக்கும் புதிய ரயில் பாதைகளை இன்று பிற்பகல் பிரதமர் மோடி நாட்டிற்கும் அர்ப்பணிக்கும் நிலையில், இன்று காலை அதே ரயில் பாதையில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்துள்ளார்.

பயணிகள்
தானே ரயில் நிலையத்தில் இருந்து மத்திய ரயில்வேயால் இயக்கப்படும் மின்சார ரயிலில் மதியம் 1 மணியளவில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏறினார். இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஏறிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், திவா ஸ்டேஷன் வரை பயணித்தார். அப்போது மின்சார ரயிலில் உள்ள நிறை, குறைகள் குறித்து அவர் பெட்டியில் இருந்த சக பயணிகளிடம் இருந்து கேட்டறிந்தார். மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே, ரயில்வே வாரிய தலைவர் வி கே திரிபாதி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

வாடா பாவ்
திவா ஸ்டேஷனில் நடைபெற்ற சிறிய அளவிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்கள், சிறப்பு ஆய்வுப் பெட்டியில் தானே திரும்பியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் தானே ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு சாலையோர கடையில் டீ குடித்த அமைச்சர் வைஷ்ணவ், அங்கேயே வடா பாவ் சாப்பிட்டுள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் நேரடியாக ரயில் நிலையத்திற்கு வந்ததால், அவரை சுற்றி பலரும் சூழ்ந்து கொண்டனர். இதனால் ரயில் நிலையத்திலும் வெளியேயும் கூட்டம் அதிகமானது.

குற்றச்சாட்டு
இந்த கூட்டத்தால் சரியான நேரத்தில் தங்களால் ரயில்களைப் பிடிக்க முடியவில்லை என்று சிலர் குற்றஞ்சாட்டினர். இன்னும் சிலர் தங்களால் இறங்க முடியவில்லை என்றும் புகார் அளித்தனர். மும்பையில் போக்குவரத்தின் உயிர்நாடியாகப் புறநகர் ரயில் சேவை கருதப்படுகிறது கொரோனா பரவலுக்கு முன்பு, புறநகர் ரயில் சேவையைத் தினசரி 75 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தினர். அப்போது கொரோனாவுக்கு பிறகு தினசரி சுமார் 60 லட்சம் பயணிகள் புறநகர் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications