ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும்.. மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
மும்பை: மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு ரத்தன் டாடாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டின் தலைசிறந்த தொழிலதிபராக அறியப்படுபவர் ரத்தன் டாடா.. கடந்த சில நாட்களாகவே இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நிலை பாதிப்பு: அவரது உடலில் ரத்த அழுத்தம் குறைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ரத்தன் டாடாவின் உடல் இப்போது பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
முன்னதாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் மறைந்த ரத்தன் டாடாவுக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரிர்ல அஞ்சலி செலுத்தினார். மேலும், மகாராஷ்டிர அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஷிண்டே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாரத ரத்னா வழங்க வேண்டும்: நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை ரத்தன் டாடாவுக்கு வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவுக்கு ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு நாட்டின் 2வது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தை வளர்த்தெடுப்பதில் ரத்தன் டாடா ஆற்றிய பங்கு குறித்தும் இந்த தீர்மானத்தில் விளக்கப்பட்டு இருந்தது. டாடா குழுமம் தொடங்கிய பல புதிய தொழில்கள், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் அதில் கூறப்பட்டது.
தீர்மானம்: மேலும், "சமூகத்தை முன்னேற்ற ஒருவர் நினைக்கும் ஒருவருக்கு எப்போதும் நாட்டின் மீது அன்பும், நேர்மையான உணர்வுகளும் அதிகம் இருக்கும். அப்படி நாட்டிற்கும் சமூகத்திற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஒரு தலைவரை நாம் இழந்துவிட்டோம். தொழில் துறையிலும் சமுதாய மேம்பாட்டிலும் டாடாவின் பங்கு இணையற்றது.
எல்லா பிரச்சினைகளையும் அவர் சமாளித்தார். எந்த நேரத்தில் ஒழுக்கத்தையும் நேர்மையையும் இழக்காமல் தொழில் செய்தார். உலக அரங்கில் டாடா குழுமத்திற்கும் நாட்டிற்கும் ஒரு முக்கிய இடத்தை ரத்தன் டாடா உருவாக்கினார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ரத்தன் டாடா: மேலும், மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ரத்தன் டாடா எடுத்த நடவடிக்கைகளையும் அதில் விளக்கப்பட்டுள்ளது.. மேலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் போது பிரதமரின் நிவாரண நிதிக்கு ரத்தன் டாடா ரூ. 1,500 கோடி நன்கொடை அளித்ததையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் தங்குவதற்கு அனைத்து டாடா குழும ஹோட்டல்களையும் அனுமதித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதில் மேலும், "மகாராஷ்டிரா மக்களின் சார்பாக டாடாவுக்கு அமைச்சரவை மரியாதை செலுத்துகிறது. இந்த துயரமான தருணத்தில் நாங்கள் டாடா குழுமத்துடன் இருக்கிறோம்" என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications