சூடுபிடிக்கும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்.. 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
மும்பை: அடுத்த மாதம் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று பாஜக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் சரத்பவார் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கைப்பற்றியிருந்தது. ஆனால், உத்தவ் அணியிலிருந்து ஷிண்டேவும், சரத்பவார் அணியிலிருந்து அஜித் பவாரும், கட்சியிலிருந்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்து ஆட்சியை கவிழ்த்தனர்.
இது சமீபத்தில் நடந்து முடிந்த நடாளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போதைய சூழலில் பாஜக+அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ்+ஷிண்டேவின் சிவசேனா ஆகியவை மகாயுதி கூட்டணியாக உருபெற்றிருக்கிறது. அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்து இக்கட்சிகள் களத்தில் குதித்திருக்கின்றன. முன்னதாக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
ஷிண்டே தரப்பு இந்த முறை அதிக இடங்களை கேட்டது. ஆனால் பாஜக ஒத்துவரவில்லை. பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸைதான் நாங்கள் முதல்வராக ஆக்க இருந்தோம். ஆனால், கடைசி நேரத்தில் உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. எனவே, தொகுதி பங்கீட்டில் பாஜகவுக்குதான் அதிக சீட் ஒதுக்கப்பட வேண்டும் என கட்சி தலைமை கறாராக பேசிவிட்டது. இறுதியில் வேறு வழியின்றி இந்த ஒப்பந்தத்திற்கு ஷிண்டே ஓகே சொல்ல தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்னர் பாஜக தனது முதல்கட்ட வேட்பாளரை அறிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இன்று மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது. இதில் 25 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஹரிஷ் மரோதிராவ் பிம்பிள், சாய் பிரகாஷ் தாஹகே, சுதாகர் விட்டல்ராவ் கோஹலே, அர்ச்சனா ஷைலேஷ் பாட்டீல் சகுர்கர் என பல முக்கிய தலைவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் இதுவரை 146 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications