திருமணம் ஆகாத பெண்ணின் 21 வார கருவை கலைக்க மும்பை ஹைகோர்ட் அனுமதி.. வழக்கின் பின்னணி
மும்பை: திருமணம் ஆகாத 23 வயது இளம்பெண்ணின் 21 வார கர்ப்பத்தை கலைக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 20 வாரத்திற்கு மேலான கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் அனுமதி பெறுவது கட்டாயம் என்பதால் இளம் பெண் தொடர்ந்தத வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
திருமணம் ஆகாத 23 வயது இளம்பெண்ணின் 21 வார கருவை கலைக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த 23 வயது இளம்பெண், விருப்பத்துடன் வைத்துக்கொண்ட உடலுறவால் கர்ப்பம் தரித்தார். எனினும், தனது நிதி நிலைமையால் தன்னால் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் தனது கருவை கலைக்குமாறு மும்பையில் உள்ள ஜேஜே அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

பெண்ணின் கர்ப்பம் தரித்து 21 வாரத்திற்கு மேல்ஆகிவிட்டதால், நீதிமன்ற அனுமதி இருந்தால் மட்டுமே, கருவை கலைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் இளம்பெண் தனது கருவை கலைக்க அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சராங் கோட்வால் மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மகாராஷ்டிரா அரசு தரப்பில் இளம்பெண்ணின் கருவை கலைக்க அனுமதி வழங்க சட்டத்தில் இடம் இல்லை எனக்கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பெண்ணின் கருவை கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் மத்திய அரசு இவ்விவகாரங்களில் விதிகளை மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
திருமணம் ஆகாத பெண்களும் எம்டிபி சட்ட வரையறைக்குள் வருவார்கள் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டியுள்ள மும்பை உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளது. கர்ப்ப கால சட்டம் விதி 3 பி-இன் கீழ், சில குறிப்பிட்ட வரம்பிற்குள் வரும் பெண்கள் மட்டுமே 24 வார கால அளவிலான கருவை கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
அதாவது, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், சிறார்கள், விதவைகள் மற்றும் விவகாரத்து பெற்றவர்கள், உடல் ரீதியாக இயலாதவர்கள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மட்டுமே 24 வார வரையிலான கருவை கலைக்க அனுமதி உள்ளது. விதிகளின் படி 20 வாரத்திற்கும் மேலான கருவை சாதாரண பெண்கள் கலைக்க வேண்டும் என்றால் நீதிமன்ற அனுமதி அவசியம்.












Click it and Unblock the Notifications