பாபா சித்திக் கொலையாளி கைது.. நேபாளத்திற்கு தப்பி செல்ல இருந்தவரை சுற்றி வளைத்த போலீஸ்! திக்திக்
மும்பை: என்சிபி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக் கடந்த மாதம் மும்பையில் வைத்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே பாபா சித்திக்கை சுட்டுக் கொன்ற சிவகுமார் என்பவரை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் என்சிபி கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவர் பாபா சித்திக். இவர் சல்மான் கான், ஷாருக் கான் தொடங்கிப் பல பாலிவுட் பிரபலங்களுடன் நெருக்கமாக இருந்தவர்.

பாபா சித்திக் படுகொலை: கடந்த அக். 12ம் தேதி மும்பையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். தனது மகனின் எம்எல்ஏ அலுவலகத்திற்குச் சென்ற பாபா சித்திக், அங்கு வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், பாபா சித்திக்கை சரமாரியாகச் சுட்டுத்தள்ளினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாபா சித்திக் அருகே உள்ள மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாபா சித்திக் கொலைக்கு பிஷ்னோய் கேங் பொறுப்பேற்று இருந்தது. சல்மான் கான் உடன் நெருங்கிய உறவில் இருந்ததற்காகவும் அவருக்கு உதவியதற்குமே பாபா சித்திக்கை கொன்றதாக பிஷ்னோய் கேங் கூறியது பரபரப்பைக் கிளப்பியிருந்தது. பாபா சித்திக் கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
கைது: இதற்கிடையே ஒரே மாதத்தில் பாபா சித்திக்கை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் பதுங்கி இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல தயாராக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் சிவகுமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உபி போலீசாரும் மும்பை போலீசாரும் இணைந்து நடத்திய ஆபரேஷனில் சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாபா சித்திக்கை மொத்தம் 3 பேர் சுட்டுக் கொன்ற நிலையில், மற்ற இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்தச் சூழலில் கடைசி கொலையாளியான சிவகுமாரையும் போலீசார் இப்போது கைது செய்து இருக்கிறார்கள். சிவகுமார் உடன் அனுராக் காஷ்யப், கியான் பிரகாஷ் திரிபாதி, ஆகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் அகிலேஷ்ந்திர பிரதாப் சிங் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேரும் தான் கொலையாளி சிவகுமாருக்கு அடைக்கலம் கொடுத்து, நேபாளத்திற்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படுகிறது.
ஷாக் தகவல்கள்: சிவகுமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல ஷாக் தகவல்கள் தெரிய வந்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தனக்குத் தொடர்பு இருப்பதை சிவகுமார் ஒப்புக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், தற்போது வெளிநாட்டில் இருக்கும் அன்மோல் விஷ்னோய் என்பவரின் அறிவுறுத்தல்படியே பாபா சித்திக் கொலை செய்ததாகவும் சிவகுமார் குறிப்பிட்டார். இந்த வழக்கில் இவர்கள் ஐந்து பேரையும் சேர்ந்து மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1990களில் சல்மான் கான் ராஜஸ்தான் மாநிலத்திற்குப் படப்பிடிப்பு ஒன்று சென்றிருந்தார். அப்போது அவர் அரிய வகை கலைமானை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், இந்த கலைமானை பிஷ்னோய் இன மக்கள் கடவுளாகக் கருதுகிறார்கள். இதனால் சல்மான் கான் தங்கள் குல தெய்வம் முன்பு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications