தாய்லாந்திற்கு உல்லாச சுற்றுலா.. மனைவிக்கு தெரியக்கூடாது என பாஸ்போர்ட்டை கிழித்த தொழிலதிபர் கைது!
மும்பை: மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த 33 வயதான தொழிலதிபர் ஒருவர் நண்பர்களுடன் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இருப்பினும், இது தனது மனைவிக்குத் தெரியக் கூடாது என்பதற்காக அவர் பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து இருந்த முத்திரையிடப்பட்ட பக்கங்களைக் கிழித்துள்ளார். இந்த விவகாரத்தில் போலீசார் இப்போது அவரை கைது செய்துள்ளனர்.
பெரும்பாலான கணவர்கள் மனையிடம் பொய் சொல்லிவிட்டு, அதைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுவார்கள். சிலர் மாட்டிக் கொள்வார்கள்.. சிலர் சமாளிப்பதாக நினைத்து வேறு பல தவறுகளை செய்வார்கள். அப்படியொரு வினோதமான சம்பவம் தான் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

பிரபல தொழிலதிபர்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் துஷார் பவார். இவர் கடந்த 2023- 2024 ஆண்டுகளில் தனது நண்பர்களுடன் பல முறை தாய்லாந்துக்கு உல்லாச சுற்றுலா சென்றுள்ளார். ஆனால் இது தொடர்பாக அவர் தனது மனைவியிடம் எதுவுமே சொல்லவில்லையாம். எங்கு மனைவி பாஸ்போர்ட்டை பார்த்தால் இந்த உல்லாச சுற்றுலா குறித்துக் கண்டுபிடித்துவிடுவாரோ என்று அஞ்சிய அவர், பாஸ்போர்ட்டில் இருந்த முத்திரையிடப்பட்ட பக்கங்களை அகற்றிவிட்டு சாதாரண பேப்பரை அதற்குப் பதிலாக வைத்துள்ளார்.
இதற்கிடையே அவர் சமீபத்தில் மீண்டும் பாங்காக் செல்ல முயன்றுள்ளார். இதற்காக அவர் இந்த பாஸ்போர்ட் உடன் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சென்றுள்ளார். அப்போது தான் அவர் பாஸ்போர்ட்டில் இந்த தில்லுமுல்லு செய்திருப்பது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு அதிகாரிகள்: விமான நிலையத்தில் இருந்த குடிவரவு துறை அதிகாரிகள் வெளிநாடு செல்வோரின் பாஸ்போர்ட்களை செக் செய்து கொண்டு இருந்தனர். அப்போது, குற்றம் சாட்டப்பட்டவரின் பாஸ்போர்ட்டை செக் செய்த போது தான் அதில் சில மாற்றங்கள் இருப்பதை குடிவரவு துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "துஷார் பவார் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு பயணம் செய்ய குடிவரவு அதிகாரியிடம் தனது பாஸ்போர்ட்டை வழங்கினார். அதிகாரி அந்த பாஸ்போர்ட்டை சோதனையிட்டபோது, அவரது பாஸ்போர்ட்டின் 12 பக்கங்கள் சிதைக்கப்பட்டதையும், ஒரிஜினல் பக்கங்கள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய போலியான பக்கங்கள் செருகப்பட்டதையும் கண்டுபிடித்தனர்.
தெளிவான பதில் இல்லை: இது குறித்துக் கேட்ட போது, அவர் தெளிவான பதிலை அளிக்கவில்லை.. முன்னுக்குப் பின் முரணான பதிலையே சொன்னார். இதையடுத்து அவர் விங் இன்சார்ஜ் பிரசாந்த் சாவந்திடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அந்த தொழிலதிபரிடம் விசாரணை நடத்தினார். அதன் பின்னரே துஷார் பவார் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.
தாய்லாந்து: அதாவது 2023 மற்றும் 2024ல் தனது நண்பர்களுடன் தாய்லாந்திற்குச் சென்றதாகவும்,மனைவிக்குத் தெரியாமல் இந்த உல்லாச சுற்றுலா சென்றதாகவும் கூறினார். இதை மனைவியிடம் மறைக்க வேண்டியிருந்ததால், பாஸ்போர்ட்டில் புதிய பக்கங்களைக் கிழித்துவிட்டு போலி பக்கங்களை வைத்துள்ளார். சட்டவிரோதமாக பாஸ்போர்ட்டில் மாற்றங்களைச் செய்து, பாங்காக் செல்ல முயன்றதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
துஷார் பவாருக்கு எதிராகப் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 318 (4) இன் கீழ் மோசடி மற்றும் இந்திய பாஸ்போர்ட் சட்டம், 1967 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications