ம்ஹூம்.. பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்..“இந்தியா” கூட்டணியில் கறார் முடிவை சொல்லும் காங்கிரஸ்!
மும்பை: "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என நாளைய மும்பை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
"இந்தியா" கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாளை நடைபெற உள்ளது. மும்பையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணியின் லோகோ, கொள்கை முழக்கம் ஆகியவை இறுதி செய்யப்பட்டு நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளது. வெள்ளையனே வெளியேறு முழக்கம் போல 'பாஜகவே வெளியேறு' என்கிற முழக்கத்தை "இந்தியா" கூட்டணி முன்வைக்க இருக்கிறது.

மேலும் நாளைய மும்பை கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், பிரதமர் வேட்பாளர், குறைந்தபட்ச செயல் திட்டம், தொகுதி பங்கீடு, மாநிலங்களில் கூட்டணி ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. பிரதமர் வேட்பாளராக ஜேடியூ, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை முன்னிறுத்த விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதில் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக உள்ளதாம்.
"இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் காங்கிரஸ் திட்டவட்டமான நிலைப்பாடு எடுத்துள்ளதாம். இதனால்தான் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் அழுத்தம் திருத்தமாக ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என தெரிவித்தும் வருகின்றனர்.
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதை "இந்தியா" கூட்டணியின் திமுக நிச்சயம் ஆதரிக்கும் என காங்கிரஸ் நம்புகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சற்று தயக்கம் காட்டினாலும் எப்படியும் ஆதரித்து விடும் என்பது காங்கிரஸின் கணக்கு. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியானது "இந்தியா" கூட்டணியிலும் பாஜக கூட்டணியிலுமாக மதில் மேல் பூனையாக இருப்பதால் பிரதமர் பதவி ரேஸில் சரத்பவார் இல்லை என்பதும் காங்கிரஸின் கருத்தாம்.
அதேநேரத்தில் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை வேண்டுமானால் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஜேடியூவுக்கு கொடுக்கலாம் என கருதுகிறதாம் காங்கிரஸ். இதனடிப்படையில்தான் ஜேடியூவுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்கக் கூடாது என தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கருத்துகளை கூறி வருகிறாராம்.
வெயிட்டிங்! மும்பை வெயிட்டிங்!












Click it and Unblock the Notifications