வெறும் 18 வயசு.. மும்பை ஐஐடியில் பயங்கரம்! தலித் மாணவர் மர்ம மரணம் - ஜாதி கொடுமை என பரபரப்பு புகார்
மும்பை ஐஐடியில் மேலும் ஒரு தலித் மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். ஐஐடியில் ஜாதிய கொடுமைகள் தொடர்வதாக மாணவர் அமைப்பு புகாரளித்துள்ளது.
மும்பை: இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடி பாம்பேயில் மேலும் ஒரு தலித் மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கிறார். கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து மாணவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், இது நிறுவன படுகொலை என அம்பேத்கர், பெரியார், பூலே படிப்பு வட்டம் குற்றம்சாட்டி உள்ளது.
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஐஐடி சென்னை, மும்பை, கான்பூர், லக்னோ உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஆனால், ஐஐடியில் அடிக்கடி நிகழும் மர்ம மரணங்கள், ஜாதி, மத கொடுமை நடப்பதாக எழும் குற்றச்சாட்டுக்களால் அடிக்கடி அதை சுற்றி எழும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை.

தலித் மாணவர் மர்ம மரணம்
இந்த நிலையில்தான் மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது தலித் மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். தர்ஷன் சொலான்கி என்ற அந்த மாணவர் பி டெக் பயின்று வந்து இருக்கிறார். கடந்த 12 ஆம் தேதி ஐஐடி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

நிறுவன படுகொலை
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, ஹாஸ்டலில் சொலான்கியுடன் அறையில் தங்கி இருந்த சக மாணவர்களுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மும்பை ஐஐடியில் செயல்பட்டு வரும் APPSC எனப்படும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் சொலான்கி மரணத்துக்கு நிறுவன படுகொலை என்று தெரிவித்துள்ளது.

தலித் ஆலோசகர் வேண்டும்
இதுகுறித்து APPSC உறுப்பினர் பிரணவ் ஜீவன் தெரிவிக்கையில், "ஜாதி ரீதியான பிரச்சனைகளை உணர்ந்த தலித் ஆலோகர் வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், ஐஐடி காலம் காலமாக மாணவர்களுக்கு ஆதரவு தரவில்லை. ஆலோசகர்களே இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளனர். பின்னர் எப்படி அவர்களிடம் தலித் மாணவர் உதவி கேட்டு செல்வார்." என்றார்.

ஐஐடி இயக்குநர்
இதுகுறித்து மும்பை ஐஐடி இயக்குநர் மாணவர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அதில், "பிற்பகல் நடந்த சோக சம்பவத்தில் நமது முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழந்து உள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள். மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெயர் கூட இல்லையே
மாணவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த இழப்பை தாங்கும் சக்தி கிடைக்க வேண்டும் என நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். மாணவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்." என்றார். ஐஐடி இயக்குநரின் இந்த கடிதத்தில் மாணவர் பெயர் விபரங்கள் குறித்துகூட தெரிவிக்கப்படவில்லை என்று பிரணவ் ஜீவன் குற்றம்சாட்டுகிறார்.

SC/ST பிரிவு
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்ற பிறகே இறந்த சொலான்கியின் விபரத்துடன் அடுத்த மெயிலை ஐஐடி அனுப்பியது. தலித் சமுதாயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஐஐடியில் குறைவாக உள்ளார்கள். இதனால் SC/ST பிரிவை அமைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. 2014 முதல் கோரிக்கை விடுத்து 2022 ஆம் ஆண்டுதான் அது செயல்பட தொடங்கியது. இதுவரை எந்த உத்தரவையும் அந்த செல் இடவில்லை.

விளிம்புநிலை சமுதாய மாணவர்கள்
நாங்கள் தயாரித்த ஆவணங்களை ஐஐடி அங்கீகரிக்கவில்லை. சொலான்கியின் மரணம் என்பது ஐஐடியில் விளிம்புநிலை சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் படும் துயரங்களை வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறார்கள். குறிப்பாக அந்த சமுதாயத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களின் கஷ்டங்களை காட்டி உள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்கள்
முதலாம் ஆண்டு படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பாட சுமைகளுடன், இந்த ஒடுக்குமுறைகளும் சேர்ந்து கடினமாகி விடுகிறது. அவர்கள் ஜாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகிறார்கள்.ஜாதிய துன்புறுத்தல்களின் காரணமாக அவர்களின் நிலை மேலும் மோசமடைகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications