"ஓ..இவர்தானா அது?" விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் - அதிரடியாக பறந்த லுக் அவுட் நோட்டீஸ்
மும்பை: அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் மதுபோதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரின் அடையாளத்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அமெரிக்க நிறுவனம் ஒன்றில் மிகப்பெரிய பொறுப்பில் அவர் இருப்பதும், மும்பையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் அவர், மும்பையில் இருந்து வேறு எங்கும் சென்றுவிடக் கூடாது என்பதற்காக போலீஸார், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

அருவருப்பான செயல்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி 'ஏர் இந்தியா' விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபரும் பயணித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து மது அருந்திக் கொண்டும், விமானத்தில் அங்கும் இங்கும் நடப்பதுமாக அந்தப் பயணி இருந்தார். இந்நிலையில், மதிய உணவு முடிந்ததும், பயணிகள் இளைப்பாறுவதற்காக விமானத்தில் இருந்து மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அப்போது, அசந்து தூங்கிக்கொண்டிருந்த சக பெண் பயணி ஒருவர் மீது அந்த போதை ஆசாமி சிறுநீர் கழித்தார். மேலும், அந்தப் பெண்ணின் முகத்திற்கு நேராக தனது ஆணுறுப்பை காட்டிக் கொண்டே இருந்தார். இதையடுத்து, மற்ற பயணிகள் அவரை திட்ட தொடங்கியதால் அங்கிருந்து அவர் நகன்று சென்றார்.

புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் விமானக் குழு உறுப்பினர்களிடம் புகார் அளித்தார். ஆனால், அவர்கள் யாரும் அந்த நபரை கண்டிக்கவோ, அவரை தனியாக அமர வைக்கவோ இல்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணை விமானத்திற்கு பின்னால் இருந்த ஒரு குறுகலான சீட்டில் அமர வைத்தனர். விமானத்தில் முதல் வகுப்பில் இருக்கைகள் காலியாக இருந்தும் அவரை அங்கு விமானக் குழுவினர் அமர வைக்கவில்லை. மேலும், அந்த நபர் மீது பாதுகாப்பு அதிகாரிகளிடமும் விமானக் குழுவினர் புகார் அளிக்காததால், இத்தனை அட்டுழியங்களை செய்த அந்த நபர் எந்தவித தண்டனைக்கும் உள்ளாகாமல் சென்றுவட்டார்.

அடையாளம் தெரிந்தது
இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், ஏர் இந்தியா குழுமத் தலைவரிடம் விமானத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து புகார் கடிதம் அளித்தார். இந்த புகார் கடிதம் அவருக்கு கிடைக்கப் பெற்றதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பறக்க ஏர் இந்தியா தடை விதித்தது. மேலும், அந்த நபர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்தது. இதன் தொடர்ச்சியாக, டெல்லி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபரின் பெயர் சங்கர் மிஸ்ரா (44) என்பது தெரியவந்தது. மும்பையைச் சேர்ந்த அவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செயல்படும் 'வெல்ஸ் ஃபார்கோ' என்ற நிறுவனத்தில் இந்தியப் பிரிவு துணைத் தலைவராக அவர் பதவி வகித்து வருகிறார்.

தலைமறைவு - லுக் அவுட் நோட்டீஸ்
இந்நிலையில், டெல்லி போலீஸார் சங்கர் மிஸ்ராவின் வீட்டிற்கு நேற்று சென்றனர். ஆனால், போலீஸார் தன்னை தேடுவதை அறிந்த சங்கர் மிஸ்ரா ஏற்கனவே தலைமறைவாகி விட்டார். போலீஸார் அவர் மீது பொது இடத்தில் ஆபாசமான செயலில் ஈடுபடுதல்' பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் மும்பையை விட்டு வேறு எங்கும் சென்றுவிடக் கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸையும் போலீஸார் பிறப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications