வங்கிக் கணக்கு இருக்கா? செயல்படாத பேங்க் அக்கவுண்ட்கள்.. ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு என்னனு பாருங்க
மும்பை: செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக விரைவான நடவடிக்கை எடுப்பதுடன், காலாண்டுக்கு ஒருமுறை அந்த கணக்குகளின் விபரங்களை தாக்கல் செய்யுமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வங்கிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்திருக்கிறது.
பொதுவாக, 2 வருடங்களுக்கு மேலாக சேமிப்பு அல்லது நடப்பு வங்கிக் கணக்கில் எந்தவித பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால், அவை செயலிழந்ததாகவே கருதப்படும்... ஏனென்றால், செயல்படாத வங்கி கணக்குகளை பயன்படுத்திதான், பெரும்பாலான மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.

செயலற்ற வங்கி கணக்கு: எனவே, ஒருவர் 2, 3 வங்கி கணக்குகளை வைத்திருந்தாலும், அவைகளை நீண்ட காலமாக முறையாக பராமரிக்கவில்லை என்றால் சிக்கல் எழக்கூடும்... எல்லா வங்கி கணக்கையும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும், குறைந்தபட்ச கணக்கையும் பராமரிக்க வேண்டும் என்றெல்லாம் ஆர்பிஐ அவ்வப்போது அறிவுறுத்திபடியே உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், செயல்படாத வங்கி கணக்குகள் தொடர்பான ரிசர்வ் வங்கி மேற்பார்வை துறை, ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. இந்த ஆய்வில், வங்கி கணக்குகள் செயலற்று போவதற்கும், உரிமை கோரப்படாத டெபாசிட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் மற்றும் நீண்ட காலமாக பரிவர்த்தனை நடைபெறாமல் இருப்பது அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் kyc தகவல்களை புதுப்பிக்காதது உட்பட பல்வேறு காரணங்கள் தெரியவந்துள்ளன.
இதையடுத்து, வங்கிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்திருக்கிறது. அதில் உள்ளதாவது: "சில வங்கிகளில் மொத்த டெபாசிட்டை விட, செயல்படாத கணக்குகள் அல்லது உரிமைக் கோரப்படாத கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை அதிகமாக உள்ளது. எனவே, வங்கிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக, செயல்படாத அல்லது முடக்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதுடன், அவற்றை செயல்படும் கணக்குகளாக மாற்ற எளிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
இணைய வங்கி: கேஓய்சி வாயிலாக, தடையற்ற முறையில் புதுப்பிக்க, மொபைல் அல்லது இணைய வங்கி, பிற வங்கிக் கிளை மற்றும் வீடியோ வாயிலாக வாடிக்கையாளரை அடையாளம் காண்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.
அரசுகளால் வழங்கப்படும் நலத்திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகள், தகவல்களை புதுப்பிக்கவில்லை எனக்கூறி முடக்கப்படுவதைக் காண முடிகிறது. இதுபோன்ற வங்கி கணக்கை தனியாகப் பிரித்து, அவர்களுக்கு திட்டங்களின் நிதி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிறப்பு முகாம்கள்: செயல்படாத அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை மறுபடியும் பயன்படுத்த, சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். அத்துடன், காலாண்டுக்கு ஒருமுறை, செயல்படாத வங்கி கணக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, மூத்த மேற்பார்வை மேலாளருக்கு, வரும் டிசம்பர் காலாண்டு முதல் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்" என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications