“என்னை சாதாரணமா நினைச்சிடாதீங்க.. அரசை கவிழ்த்தவன்”.. ஷிண்டே வார்னிங்! அதிரும் மகாராஷ்டிரா அரசியல்!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் - துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து மோதல் நிலவுவதாக கூறப்படும் நிலையில் தன்னை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஷிண்டே கூறியுள்ளளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியில் உள்ளது. பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் இணைந்து ஆட்சியில் உள்ளன. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா வசம் தற்போது 57 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஆளும் பாஜக - சிவசேனா - என்சிபி கூட்டணிக்குள் விரிசல் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, சிவசேனா எல்ஏக்களுக்கு 'Y' பிரிசு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது காரணமாகக் கூறப்பட்டது. அதாவது, 2022ஆம் ஆண்டு சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே வெளியேறியபோது அவரை ஆதரித்த எம்.எல்.ஏக்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த பாதுகாப்பு திடீரென திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 20 பேருக்கு வழங்கப்பட்ட 'ஒய்' பிளஸ் பாதுகாப்பை குறைத்து, ஒரு காவலரை மட்டும் பாதுகாப்புக்கு நியமித்திருக்கிறது மகாராஷ்டிர மாநில அரசு. அதேபோல சிவசேனா முன்னாள் எம்.பி.க்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்து வந்த ஏக்நாத் ஷிண்டே, பின்னர் பாஜக தலைமை தலையிட்ட பிறகு, பிரதமர் மோடியே பேசிய பிறகுதான் பதவியை விட்டுக்கொடுத்தார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போதிருந்தே, ஏக்நாத் ஷிண்டேவுக்கும் ஃபட்னாவிஸுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது, அதன் பிறகும், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூட்டிய கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார் ஏக்நாத் ஷிண்டே. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விடுத்த அழைப்புகளையும் ஏக்நாத் ஷிண்டே புறக்கணித்து வருகிறார்.
ஃபட்னாவிஸ் - ஏக்நாத் ஷிண்டே இடையிலான அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இந்த நிலையில், தற்போது முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்துகொண்ட அரசு விழாக்களில் துணை முதல்வர் ஏக்நாத் கலந்துகொள்ளாதது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மகாராஷ்டிரா அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், தன்னை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார். கடந்த முறை ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்தபோது ரூ.900 கோடி மதிப்பிலான ஜல்னா திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தை தற்போது தேவேந்திர பட்னாவிஸ் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "நான் ஒரு சாதாரண கட்சித் தொண்டன், ஆனால் நான் பாலா சாஹேப்பின் தொண்டனும் கூட. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022ல் என்னை சாதாரணமாக நினைத்தார்கள். நான் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்தேன்.
சட்டமன்றத்தில் எனது முதல் உரையிலேயே, தேவேந்திர ஃபட்னாவிஸ் 200க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவார் என்று நான் கூறினேன். எங்களுக்கு 232 இடங்கள் கிடைத்தன. அதனால்தான் என்னை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காக இது திட்டமிடப்பட்டுள்ளது என்பது மக்களுக்குப் புரியும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications