'அண்ணா' திமுக மாதிரி..'பாலசாகேப்' சிவசேனா கட்சியை தொடங்கும் அதிருப்தி கோஷ்டி! மும்பையில் 144 தடை!!
மும்பை/குஹவாத்தி: மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா (பாலாசாகேப்) என்ற புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் நிலவி வரும் அதி உச்ச அரசியல் குழப்பமானது அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா போலீசார் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் 40-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏக்கள், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலும் அத்தனை எம்.எல்.ஏக்களும் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தில் உள்ள சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளனர். முதலில் குஜராத் மாநிலம் சென்ற சிவசேனா எம்.எல்.ஏக்கள், பின்னர் அஸ்ஸாம் சென்றுள்ளனர். இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கும் நடவடிக்கையில் சிவசேனா தலைமை இறங்கியுள்ளது. முதல் கட்டமாக 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரியிருக்கிறது சிவசேனா. இன்னொரு பக்கம் இதுநாள் வரை அமைதி காத்த சிவசேனா தொண்டர்கள், இப்போது வீதிகளில் இறங்கிவிட்டனர்.
Recommended Video

புதிய கட்சி உதயம்?
சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வீடுகள், அலுவலகங்களை இலக்கு வைத்து சிவசேனா தொண்டர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்ததால் சிவசேனாவின் போராட்டம் அடக்கி வாசிக்கப்பட்டு வந்தது. இப்போது கட்சியே காணாமல் போய்விடும் நிலைமை உருவாகி உள்ளது. அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தாமே ஒரிஜனல் சிவசேனா என்கிறார்; இன்னொரு பக்கம் சிவசேனா (பால்தாக்கரே) எனும் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பையில் 144 தடை
தற்போது சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தை முன்னெடுப்பதால் அதுவும் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு களமிறங்குவதால் தீவிரமாக இருக்கும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர உஷார் நிலையில் உள்ளனர். மேலும் தலைநகர் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் தானே இல்லத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குவஹாத்தி போராட்டம்
இதனிடையே குவஹாத்தியில் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டி முகாமிட்டிருக்கும் விவகாரம் அம்மாநில அரசியலில் சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்த சொகுசு ஹோட்டல் முன்பாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸின் அஸ்ஸாம் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் இதேபோல் போராட்டம் நடத்தியிருந்தனர்.












Click it and Unblock the Notifications