அவ்ளோதானா.. 2000 ரூபாய் நோட்டுகளை அடுத்தடுத்த நாட்களிலும் மாற்றலாமா? ரிசர்வ் வங்கி முக்கிய அப்டேட்
மும்பை: மதிப்பிழப்பு செய்யப்பட்டு இருக்கும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடையும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் அதை மாற்ற முடியுமா? வரிவாக பார்ப்போம்.
கடந்த 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வங்கிகள், ஏடிஎம்கள் வணிக நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் கடந்த ஓராண்டாகவே குறைந்த நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் சுழற்சியும் அப்போதே ரிசர்வ் வங்கியா நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ரூ.2000 நோட்டுக்கள் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி செல்லாமல் போயின. அதற்கு முன்பாகவே ஏராளமான மக்கள் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றினர். இருப்பினும், பலரால் பணத்தை மாற்ற முடியவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அக்டோபர் 7 ஆம் தேதி வரை வங்கிகளில் பணத்தை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் இன்று முடிவடைகிறது.
இந்த நிலையில், பணத்தை மாற்றுவதற்கான அவகாசத்தை ரிசர்வ் வங்கி மேலும் நீட்டிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக சந்தேகங்களை ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ் நேற்று தெளிவுபடுத்தி உள்ளார். அப்போது அவர் பேசியதாவது, "ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகளை மக்கள் வங்கிக் கணக்கில் செலுத்தவும், வங்கியில் மாற்றவும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது, அக்டோபர் 7 ஆம் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டது.
ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டு உள்ளன. 96 சதவீதம் நோட்டுகள் கிடைத்து இருக்கின்றன. ரூ.12,000 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வரவில்லை. அவகாசம் நிறைவடைந்த பிறகும் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற முடியும். நாடு முழுவதும் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலங்களிலும் ரூ.2000 நோட்டுக்களை கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். அங்கு செல்ல முடியாதவர்கள் தபால் துறையை பயன்படுத்திக் கொள்ளலாம்." என்றார்.
இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016 ஆம் அண்டு நவம்பர் 8 ஆம் தேதி தொலைக்காட்சிகளில் தோன்றி செல்லாது என்று அறிவித்தார். அதற்கு மாற்றாக ரிசர்வ் வங்கி பிங்க் நிற 2000 ரூபாய் நோட்டு மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications