சுயேச்சை பெண் எம்பி,எம்எல்ஏ வீட்டில் அனுமன் பாடல்!சிவசேனா கட்சி தொண்டர்கள் ஆக்ரோஷம்!பரபரத்த மும்பை
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு அனுமன் பக்தி பாடல் பாடப்போவதாக அறிவித்த சுயேச்சை பெண் எம்பி, அவரது கணவரான எம்எல்ஏ ஆகியோரின் வீட்டை சிவசேனா கட்சியினர் இன்று முற்றுகையிட்டனர். மேலும் வீட்டின் முன்பு அவர்கள் அனுமன் பக்தி பாடலை பாடி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
இங்குள்ள பத்னீரா சட்டசபை தொகுதி சுயேச்சை எம்எல்ஏவாக ரவி ராணா உள்ளார். இவர் 3வது முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி உள்ளார். இவரது மனைவியும், நடிகையுமான நவ்நீத் ராணா அமராவதி தொகுதி எம்பியாக உள்ளார்.

பெண் எம்பி அறிவிப்பு
இவர்கள் 2 பேரும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். ரவி ராணா, நவ்நீத் ராணா ஆகியோர் கூறுகையில், ‛‛உத்தவ் தாக்கரே அனுமன் பக்தி பாடல்களை படித்து மகாராஷ்டிராவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். மேலும் கொரோனாவை காரணம் காட்டி 2 ஆண்டுகளாக அவர் எம்பி, எம்எல்ஏக்களை சந்திக்காமல் உள்ளார். மாநிலத்தின் நலன் கருதி உத்தவ் தாக்கரே அனுமன் பக்தி பாடல் பாட வேண்டும். இரண்டரை ஆண்டுகளாக பணி செய்யாமல் அவருக்கு முதல்வர் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அனுமன் ஜெயந்தி தினத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே அனுமன் பாடல் பாடி வழிபாடு செய்யவில்லை. இதை கண்டித்து அவரது வீட்டின் முன்பு நாளை (அதாவது இன்று) காலை 9 மணிக்கு அனுமன் சாலிசா பாடல் பாட உள்ளேன்'' என தெரிவித்தனர்.

முதல்வர் வீட்டுக்கு பாதுகாப்பு
இதற்கு சிவசேனா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கையாக முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீடான மாதோஸ்ரீ , அலுவலக இல்லமான வர்ஷா ஆகியவற்றின் முன்பும் இன்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வீட்டின் அருகே யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

எம்பி, எம்எல்ஏ வீடு முற்றுகை
இந்நிலையில் தான் இன்று காலை சிவசேனா கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் மும்பையில் உள்ள எம்எல்ஏ ரவி ராணா, அவரது மனைவியும் எம்பியுமான நவ்நீத் ராணா ஆகியோர் வசிக்கும் வீட்டின் முன்பு திரண்டனர். மேலும் தம்பதிக்கு எதிராக கோஷமிட்டவர்கள் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்தினர். அதோடு, அனுமன் பக்தி பாடலை பாடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நோட்டீஸ் வழங்கல்
இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் தம்பதியை தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு முற்றுகையிட்டவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த விவகாரத்தில் நேற்று மகாராஷ்டிரா போலீசார் அமராவதி எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவரும் பத்னீரா தொகுதி எம்எல்ஏவுமான ரவி ராணா ஆகியோருக்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என நோட்டீஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஜோடி
இந்த தம்பதி யுவ சுவபிமான் கட்சியை நடத்தி வருகின்றனர். ரவி ராணா 2009, 2014, 2019 ஆகிய சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக பத்னீரா தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றவார் ஆவார். கடந்த பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு நெருக்கமாக இருந்தார். இவரது மனைவி நவ்நீத் ராணா 2019 மக்களவை தேர்தலில் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார். இவருக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில் சிவசேனா வேட்பாளர் ஆனாந்த் அத்சுலை தோற்கடித்தார். இவர் மாடலிங் துறையில் இருந்து நடிகையானார். அதன்பிறகு 2011ல் ரவி ராணாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி யோகா குரு பாபா ராம்தேவின் தீவிர விசுவாசி என்பதும், இவர்களின் திருமணத்தை பாபா ராம்தேவ் தான் நடத்தி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதில் நவ்நீத் ராணாவுக்கு மத்திய அரசு சார்பில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications