போச்சே.. கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவிடம் ரூ.44 லட்சம் மோசடி.. முதுகில் குத்திய நண்பர்.. ஷாக் தகவல்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் உமேஷ் யாதவிடம் பணமோசடி நடந்துள்ளது. ரூ.44 லட்சத்தை அவரது நண்பரான முன்னாள் மேனேஜர் சைலேஷ் தாக்ரே மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக உமேஷ் யாதவ் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் சைலேஷ் தாக்ரேவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் மோசடி எப்படி நடந்தது? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
பெரிய பெரிய பிரபலங்கள் தங்களது கணக்கு விபரங்களை பார்த்து கொள்ள மேனேஜர் வைத்து கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. மிகப்பெரிய தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் மேனேஜர்களை வைத்து உள்ளனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வசித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவும் மேனேஜர் வைத்துள்ளார். உமேஷ் யாதவுக்கு அவரது நண்பரான நாக்பூர் கோரடி பகுதியை சேர்ந்த சைலேஷ் தாக்ரே(வயது 37) என்பவர் தான் மேனேஜராக இருந்தார்.

உமேஷ் யாதவிடம் ரூ.44 லட்சம் மோசடி
உமேஷ் யாதவ் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வானது பிறகு சிறிது காலத்திலேயே அதாவது 2014ல் இருந்து சைலேஷ் தாக்ரேவை மேனேஜராக நியமனம் செய்து கொண்டார். நண்பர் என்பதால் சைலேஷ் தாக்ரே உமேஷ் யாதவின் அதீத நம்பிக்கையை பெற்றார். இதனால் உமேஷ் யாதவின் சொத்து, பணபரிவர்த்தனை, வங்கி கணக்குகள் உள்ளிட்டவற்றை நிர்வகித்து வந்தார். இந்நிலையில் தான் உமேஷ் யாதவிடம் இருந்து அவரது நண்பர் சைலேஷ் தாக்ரே ரூ.44 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றி அறிந்த உமேஷ் யாதவ் உடனடியாக அவரை பணியில் இருந்து நீக்கம் செய்தார்.

போலீஸ் வழக்குப்பதிவு
இந்நிலையில் தான் சைலேஷ் தாக்ரே மீது உமேஷ் யாதவ் நாக்பூர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சைலேஷ் தாக்ரே மீது இந்திய தண்டனை சட்டம் 406 (நம்பிக்கை துரோகம்) மற்றும் 420 (ஏமாற்றி மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த சைலேஷ் தாக்ரே தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நடந்தது என்ன?
இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‛‛உமேஷ் யாதவ் சொந்தமாக பிளாட் ஒன்றை வாங்க முடிவு செய்தார். இதுபற்றி சைலேஷ் தாக்ரேவிடம் தெரிவித்தார். அவர் உதவி செய்வதாக கூறியதோடு நாக்பூரில் உள்ள பரேன் பகுதியில் ரூ.44 லட்சத்துக்கு பிளாட் வாங்கி தருவதாக கூறினார். இதை நம்பிய உமேஷ் யாதவ் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.44 லட்சத்தை சைலேஷ் தாக்ரேவுக்கு மாற்றினார். பிளாட் வாங்கும் வகையில் இந்த பணப்பரிமாற்றம் நடந்தது.

பெயர் மாற்றி மோசடி
இந்த பணப்பரிமாற்றத்தை தொடர்ந்து சைலேஷ் தாக்ரே, உமேஷ் யாதவ் பெயரில் சொத்து வாங்குவதற்கு பதில் அவரது பெயரில் சொத்து வாங்கி கொண்டார். இதுபற்றி அறிந்தவுடன் பணியில் இருந்து அவரை நீக்கிய உமேஷ் யாதவ் பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் சைலேஷ் தாக்ரே பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. வாங்கிய சொத்தையும் உமேஷ் யாதவ் பெயருக்கு மாற்றிக்கொடுக்கவில்லை. இதனால் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி சைலேஷ் தாக்ரேவை கைது செய்வோம்'' என்றனர்.












Click it and Unblock the Notifications