ஐபிஎல் தொடருக்கு இடையே சில போட்டிகளில் ஓய்வெடுங்கள்.. இந்திய வீரர்களுக்கு ரோகித் சர்மா அட்வைஸ்!
மும்பை: ஐபிஎல் தொடரின் போது ஏற்படும் வேலை பளுவை குறைக்க, இந்திய வீரர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான வீரர்களும் தங்கள் அணிகளுடன் பயிற்சியில் இணைந்து வருகின்றனர்.

ரோகித் சர்மா பேட்டி
இதனிடையே ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா மறைமுகமாக அறிவுறுத்தல் ஒன்றை கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஐபிஎல் தொடர்களுக்கு இடையே வீரர்களுக்கு ஓய்வு கிடைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, இந்த விவகாரத்தில் ஐபிஎல் அணி நிர்வாகங்களே முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் வீரர்களை நிர்வகிக்கும் பொறுப்பு அணிகளுக்கே உள்ளது.

ரோகித் சர்மா சந்தேகம்
அதேபோல் நமது தரப்பில் இருந்தும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதி முடிவை வீரர்களும், அணி நிர்வாகமுமே எடுக்க வேண்டும். இங்கே அனைவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தான். அவர்களின் உடல்நிலையை கவனத்தில் கொண்டே செயல்படுகிறார்கள். ஒருவேளை ஐபிஎல் தொடரின் போது அதிக பளு இருப்பதாக உணர்ந்தால், அணி நிர்வாகத்துடன் பேசிவிட்டு ஒரு சில போட்டிகளில் இருந்து விலகிக் கொள்ளலாம். ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளார்.

முக்கியத் தொடர்கள்
ஐபிஎல் தொடருக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஆசியக் கோப்பைத் தொடர், உலகக்கோப்பைத் தொடர் ஆகியவை அடுத்தடுத்து நடக்க உள்ளது. ஏற்கனவே ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் இல்லாத சூழலில், கூடுதலாக சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால், இந்திய அணியின் கனவு கனவாகவே மாறிவிடும்.

மறைமுக அறிவுறுத்தல்
கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் வீரர்கள் அனைவரும் வெவ்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு, வெவ்வேறு சூழல்களில் விளையாட வேண்டிய நிலை வரும். அதேபோல் ஐபிஎல் தொடரின் கவர்ச்சியால் வேலை பளுவை கண்டுகொள்ளாமல் விட்டால், வீரர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ரோகித் சர்மா மறைமுகமாக வேலை பளுவை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications