விவசாயிகள் கடன் தள்ளுபடி.. 25 லட்சம் பேருக்கு வேலை.. மகாராஷ்டிராவில் பாஜக தேர்தல் வாக்குறுதி
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 க்கு பதிலாக ரூ. 2,100 வழங்கப்படும், 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் சட்ட மன்ற தேர்தல் வருகிற 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சிவசேனா( ஷிண்டே) தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) ஆகிய எதிர்க்கட்சிளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன. பெண்களுக்கு மாதம் ரூ.3000, அரசு பஸ்சில் இலவச பயணம் போன்ற வாக்குறுதியை காங்கிரசின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பியூஸ் கோயல், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-
* விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* பெண்களுக்கு மாதம் ரூ.1,500 க்கு பதிலாக ரூ. 2,100 வழங்கப்படும்.
* 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
* ஆட்சி அமைத்த 100 நாட்களில் டெக்னாலஜியை மேம்படுத்த விஷன் ஆவணம் அறிமுகம் செய்யப்படும்.
* மேக் இன் இந்தியாவின் திட்டத்தில் முதலீட்டாளர்கள் விரும்பும் இடமாக மகராஷ்டிரா மாற்றப்படும்.
* திறன் வாய்ந்த இளைஞர்களை கண்டறிய திறன் கணக்கெடுப்பு (Skill Census) நடத்தப்படும்.
* பின் டெக், ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிறுவனங்களுக்கு முக்கியத்துவம்
* அனைத்து பயிற்சி லேப்களும் மகாராஷ்டிராவில் அமைக்கப்படும்.
* இளைஞர்களுக்காக சுவாமி விவேகானந்தா ஃபிட்னஸ் மற்றும் ஆரோக்கிய மையம் அமைக்கப்படும்.
* 1 டிரில்லியன் பொருளாதாமராக மகாராஷ்டிரா மாற்றப்படும்.
* விக்ஷித் பாரத் போல விக்ஷித் மகாராஷ்டிராவாக மாற்றப்படும். அதவாது வளர்ச்சிபெற்ற மாநிலமாக மகாராஷ்டிரா உருவாக்கப்படும்.
அமித்ஷா பேச்சு: தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:- விவசாயிகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை குறித்து நாங்கள் பேசி வருகிறோம். விவசயிகளுக்கு உரிய மரியாதை அளிப்பது, பெண்களுக்கு அதிகாரமளிப்பது எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மகா விகாஸ் அகாடி கூட்டணியின் அரசியல் திருப்திபடுத்தும் அரசியலாக உள்ளது.
அதிகாரத்திற்காக மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள். எங்களுக்கு மூன்றாவது முறையாக ஆட்சியை கொடுங்கள். கடந்த 2019 தேர்தலிலும் மக்கள் எங்களுக்கு தான் வாக்களித்தனர். ஆனால், அதிகார பேராசையால் அது முதலில் மாறியது. பொய்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு அந்த அரசு கவிழ்ந்துவிட்டது. சாவர்க்கரையும் பாலாசாகேப் தாக்கரேவையும் புகழ்ந்து பேசுமாறு ராகுல் காந்தியிடம் கேட்குமாறு உத்தவ் தாக்கரேவிடம் நான் கேட்க விரும்புகிறேன்.












Click it and Unblock the Notifications