பூட்டிய அறையில் அமித்ஷா போட்ட ரகசிய உத்தரவு! அம்பலப்படுத்திய உத்தவ் தாக்கரே- பரபர மகாராஷ்டிரா!
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரேவின் அரசியல் அத்தியாயத்தை முடித்துதான் ஆக வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருப்பதாக பரபர தகவல்கள் வெளியாகி உள்ளன. நாக்பூரில் நடைபெற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியை உடைத்து எங்களின் அரசியல் கதையை முடிக்க வேண்டும் என அமித்ஷா உத்தரவிட்டார் என பகிரங்கப்படுத்தி இருக்கிறார் சிவசேனா தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரசாரம் என களம் இறங்கிவிட்டன.

பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிராவில் ரூ11,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் அர்ப்பணித்தும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிராவில் 2 நாட்கள் முகாமிட்டு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றதுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
அமித்ஷா நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? அமித்ஷா போட்ட உத்தரவு என்ன என்பதை முன்னாள் முதல்வர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பகிரங்கப்படுத்த மகாராஷ்டிராவில் தேர்தல் களம் அனலடிக்கத் தொடங்கி இருக்கிறது.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், அமித்ஷா அண்மையில் நாக்பூர் பயணம் மேற்கொண்டார். அங்கு பூட்டிய அறையில் பாஜக தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார் அமித்ஷா. இந்த ஆலோசனையின் போது எங்களது மகா விகாஸ் அகாடி கூட்டணியை உடைத்தாக வேண்டும். என்னுடைய மற்றும் சரத்பவாரின் அரசியல் கதையையே இந்த தேர்தலுடன் முடிக்கவும் வேண்டும் என அமித்ஷாதான் உத்தரவிட்டிருக்கிறார். எதற்காக இப்படி கொல்லைப்புறமாக, திரை மறைவில் போய் பேச வேண்டும்? ஏன் மக்கள் மத்தியில் பகிரங்கமாகவே பேச வேண்டியதுதானே? என்னுடைய அரசியலைத் தீர்மானிக்கப் போவது பாஜக அல்ல.. மகாராஷ்டிரா மாநில மக்கள்தான் என்பதை அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும்.
என்னையும் சரத்பவாரையும் அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டிவிட்டால் பாஜகவுக்கு என்ன ஆதாயம் தெரியுமா? மகாராஷ்டிரா மாநிலத்தை சூறையாடிவிட முடியும் என்பதுதான். இப்படி கட்சிகளை உடைப்பது, அரசியல் தலைவர்களின் அத்தியாயங்களை முடித்துவிடுவது என்கிற பாஜகவின் வியூகங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அமைதியாக கடந்து செல்வதுதான் மிகவும் ஆச்சரியம் தருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications