மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு? வாக்குப் பதிவு விவரங்களில் பெரும் மாற்றம்! மாஜி தேர்தல் ஆணையர் பகீர்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவின் போது மாலை 5 மணிக்கு வெளியான தற்காலிக வாக்குப்பதிவு விவரங்களுக்கும் அடுத்த நாள் வெளியான விவரங்களுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், இது கவலை அளிக்க கூடியதாக இருப்பதாக முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்ஒய் குரேஷி கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா யுதி கூட்டணி ஆட்சி நடைபெற்றது.

இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மொத்தம் உள்ள 288 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஏத்நாத் ஷிண்டே சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவர் பிரிவு 86 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கின. கடந்த 20ஆம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது. இதில் பாஜக மட்டுமே 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20, காங்கிரஸ் 16, சரத்சந்திர பவார் தலைமையிலான என்சிபி 10 இடங்களிலும் வென்றுள்ளன. இந்த நிலையில், வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கவலை தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் மகாராஷ்ரா மாநில அமைச்சர்களே 377 வாக்குகள், 1523 வாக்குகள், 1509 வாக்குகள், 2161 வாக்குகள் என மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தோற்றதற்கு, மின்னணு வாக்கு இயந்திரத்தில் நடைபெற்ற குளறுபடிகள் தான் காரணம் என புகார் எழுந்திருக்கிறது. பல இடங்களில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை விட இரண்டாவது மூன்றாவது இடம் பெற்றவர்களின் வாக்கு வித்தியாசம் மிக குறைவாக உள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது வெளியான தற்காலிக வாக்கு எண்ணிக்கை விவரங்களுக்கும் அடுத்த நாள் வெளியான வாக்கு எண்ணிக்கை விவரங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணிக்கு வெளியான வாக்குப்பதிவு விவரங்களுக்கும் அடுத்த நாள் வெளியான வாக்குப்பதிவு விபரங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. இது நிச்சயம் கவலை அளிக்க கூடிய விஷயம் எனக் கூறியிருக்கிறார் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையரான எஸ்ஒய் குரேஷி, பல இடங்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது, தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரங்களிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications