மராட்டிய வினோதம்! வீர சிவாஜிக்கு நேர்ந்த கதிதான்..தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக 'ஜாதி' முட்டுக்கட்டை?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை பாஜக அறுவடை செய்திருக்கிறது. இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு காரணம் சந்தேகமே இல்லை தேவேந்திர பட்னாவிஸ்தான். இதனால் தேவேந்திர பட்னாவிஸ்தான் மகாராஷ்டிராவின் முதல்வர் என பாஜக அறிவித்திருக்கலாம். ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக மீண்டும் மகுடம் சூடுவதற்கு மகாராஷ்டிரா மண்ணில் ஒரு சிக்கல் இருக்கிறது.. ஆம் 350 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிரா மண்ணில் நிகழ்ந்த ஒரு வரலாற்று சம்பவம் இப்போது அப்படியே வேறு ஒரு வடிவத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம் தரக் கூடியதாகவே இருக்கிறது.

மகாராஷ்டிராவில் 350 ஆண்டுகளுக்கு முன்னர் கிபி 1674-ம் ஆண்டு ஒரு சம்பவம் நிகழ்கிறது. அந்த சம்பவத்தை சாமானியருக்கும் புரியும் வகையில் ராமன் எத்தனை ராமனடி திரைப்படம் வெளிப்படுத்தியிருக்கும். அந்த காட்சிகளுக்கு வசனம் எழுதியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அந்த காட்சிகளுக்கும் வசனத்துக்கும் உயிர் கொடுத்தவர் கணேசன்.. அந்த பாத்திரத்தை ஏற்று நடித்ததாலேயே தந்தை பெரியாரால் 'சிவாஜி' கணேசன் என பாராட்டப்பட்டு அதுவே கணேசன் சொந்தப் பெயராக மாறிப் போய் ஒரு சகாப்தமானார்.

maharashtra assembly election 2024 2024

ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தில் மராத்திய மாமன்னன் சிவாஜி பேசும் வசனம் இது:

ஏன்! மகுடம் தயாராகவில்லையா

இல்லை!

பிறகு! காரணம்
தாங்கள் தாழ்ந்த ஜாதியாம்
அரசியலையே அறிய மாட்டிர்களாம்
அதனால் முடிசூட்டி கொள்ள முடியாதாம்

தாழ்ந்த ஜாதி?
அரசியலை அறியாதவன்?
ம்ம்ஹு
யார்?

தானும் நாடும் ஒன்றென கண்டு
தன்னையே தந்த மன்னன் சிவாஜி! தாழ்ந்த ஜாதியா?

மன்னர் குலத்து மகுடம் தாங்க முடியாதா

தார்தாரியர் தந்த புரவியில் அமர்ந்து
ஆற்றெழுந்த சிவாஜியை கண்டு
நாட்டுக்குடைய நல்லவனென்றும்
போர் வாட்டு முழக்கும் மன்னவனென்றும்
ஆரத்தி எடுத்த மக்களெங்கே
ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும்
அதன் சாரத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே

உரைத்து வாளெடுத்த ஒவ்வொரு கணமும்
மராட்டியம் மராட்டியம் என்றே முழங்கி
இறை அடிக்க துடித்த வேங்கை போல்
எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி
கறைபடியாத என் அன்னை நாட்டை காப்பேன் காப்பேன் என சூளுரைத்து
இந்த நாடு என் சொந்த நாடு
இந்த மக்கள் என் சொந்த மக்கள்
உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன்
பகைவரை தேடினேன்
வாள் கொண்டு சாடினேன்
வெற்றியை நாடினேன்
பகை தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம்
முடிசூடிக்கொள்ள மட்டும் தடை செய்வானாம்

அரசியலை நான் அறியாதவனா ஹங்
அரசு வித்தைகள் புரியாதவனா ஹ ஹங்
எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்பறை கேட்டு
நொந்து போக நான் நோயாளியல்ல
என்னைவிட்டொருவன் இந்த தரணியாளும் தகுதி அடைந்தது விட்டானா
ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு
நாமே தான் நாடென்று தலை கிறுக்கி திரியும் அந்த புல்லுருவிகள்
எனது முடியை தடுக்கின்றார்களா அல்லது
தங்கள் முடிவை தேடுகின்றார்களா

அதோ போர்நா
கொட்டிய முரசும் கூவிய படையும் எட்டிய புரியும் எழுந்து நடந்து
கோட்டை மதிலை சுற்றி வளைத்து வேட்டையாடி வெற்றி படைத்து
வாழ்க சிவாஜி வாழ்கவென்று வணங்கிய போது ஓ..வென்று எதிரொலித்ததே
இந்த கோட்டை தான்

அதோ புறந்தர்
போகாதீர்கள் படை பலம் அதிகம்
கோட்டை முன்னால் தடைகளும் அதிகம்
ஒற்றன் தடுத்தான் ஒருநாள் என்னை
இடுபொடிந்தோர் எல்லாம் இல்லத்தில் இருங்கள்
கோழைகள் விலக வீரர்கள் வரட்டும்
ஏறுமுன்னேறு என எக்காளமிட்டு
பகைவர் தலைகளை கனியென கொய்து
முரசம் ஒலித்து நான் முழக்கிய கோட்டை இதுதான் புறந்தர் இதுதான்

அதோ ராஜகிரி
ஆடுவார் ஆட்டமும் பாடுவார் பாட்டுமாய் அந்நியர் களித்திருக்க
யாரது மண்ணிலே யாரது நாடகம் பாப்போம் என்று நான் படையெடுக்க
என்னடா முடியும் உன்னால் என்று என் எதிரிகள் கொக்கரிக்க
இதுவும் முடியும் இன்னமும் முடியும் என்று நான் வாளெடுக்க
பெட்டையர் கூட்டம் உள்ளம் கலங்க
மராட்டிய மண்டல மக்கள் களிக்க
நான் கட்டிக்காத்த கோட்டை இதுதான்

அதோ கல்யாண்
கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்
ஐயோ என்று அலறிய குழந்தைகள்
முடிவெறியாது தவித்த முதியோர்
கொடியோர் கையில் சிக்கி கிடந்தனர்
பகைவர் பொடிப்பொடியாக போர்க்களம் ஏந்தி
மராட்டிய கோடியை நான் ஏத்திய கோட்டை இது தான்

என்னயா கேட்டார்கள் நீயாரென்று
எவன் இந்த மண்ணுக்கு சொந்தக்காரனோ
எவன் இந்த மண்டலத்தின் காவலனோ
எவனது நெற்றியில் ஏப்போதும் ரத்தத்திலகம் திகழ்ந்து கொன்டேயிருக்குமோ
அவனை பார்த்து
வாழ வந்த வஞ்சகர் கூட்டம்
மக்களின் மடமையை கொன்டே வளரும் கூட்டம்
கேலி பேசுகிறதாம்
தாழ்ந்த ஜாதி
அரசியல் அறியாதவனென்று

இதுதான் முடிவென்றால்
இல்லையெனக்கு முடியென்றால்
நான் காத்த கோட்டைகள் வேண்டுமோ
கொத்தளங்கள் வேண்டுமோ
வெற்றி பாட்டு வேண்டுமோ
பரவசம் வேண்டுமோ
கரையான் புற்று என்ன கரு நாகங்களுக்கு சொந்தமோ

அழியட்டும் கோட்டைகள்
இடியட்டும் மதில் சுவர்கள்
அன்னை பவானி
அன்னை பவானி
உன் கண்கள் சிவக்கட்டும்
மின்னல் ஒளிரட்டும்
இடிஇடிக்கட்டும்
சூறைக்காற்று மோதட்டும்
கொடிமழை பெய்யட்டும்
கொடியவர்கள் அழியட்டும்
கொடியவர்கள் அழியட்டும்
கொடியவர்கள் அழியட்டும்
கொடியவர்கள் அழியட்டும்

இதெல்லாம் இருக்கட்டும்.. இதற்கும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராவதற்கும் என்னய்யா சம்பந்தம் என கேட்கிறீர்களா?

மகாராஷ்டிராவில் "மராத்தியர்கள்"தான் பெரும்பான்மையினர். இம்மாநிலத்தில் 75% நிலம் மராத்தியர்கள் வசமே இருக்கிறது. இந்த மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் 55% மராத்தியர்களிடம் இருக்கிறது. மாநிலத்தின் 105 சர்க்கரை ஆலைகளில் 86 மராத்தியர்களுக்குச் சொந்தமானது. மகாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகையில் 30% மராத்தியர்கள்.

மகாராஷ்டிரா அரசின் முதல்வராக பதவி வகித்தவர்களில் 13 பேர் மராத்தியர்கள். 2 பேர்தான் பிராமணர்கள். மகாராஷ்டிராவில் பிராமணர்கள் மக்கள் தொகையில் 10%தான் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் மனோகர் ஜோஷி 1995-ல் முதல்வராக இருந்தார். அதன் பின்னர் 2014-ல் பிராமணராகிய தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார்.

2014-ல் பிராமணரான தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் முதல்வராக பதவி வகித்த காலத்தில் 'மராத்தியர்கள்' கட்சி வேறுபாடின்றி அவருக்கு எதிராக அத்தனை கலகங்களையும் உருவாக்கினர். மராத்தா இடஒதுக்கீடுப் போராட்டமும் உச்சகட்டமாக நடைபெற்ற காலம். அப்போது பட்னாவிஸ் கூறியிருந்தது, நான் ஒரு பிராமணர் என்பதற்காக என்னை பாஜக முதல்வர் பதவியில் இருந்து நீக்காது என நம்புகிறேன்" என்பதுதான்.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்... தேசிய கட்சியைச் சேர்ந்தவர்.. ஆனாலும் கட்சி தாவி ஓடிவந்த ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு துணை முதல்வராகவும் பணியாற்றியவர் பட்னாவிஸ். காரணம் 'பிராமணர்' ஜாதிதான்.

இப்போதும் வரலாறு காணாத வெற்றியை மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பெற்றுத் தந்தவர் தேவேந்திர பட்னாவிஸ் என்பதில் சந்தேகமே இல்லை. தாம் ஒரு நவீன அபிமன்யு.. அத்தனை சக்கரவியூகங்களையும் தகர்த்து எறிவேன் என சபதம் போட்டு சாதித்துக் காட்டியவர்.. இந்த நிமிடம் வரை அத்தனை கண்களும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகலாம் என நம்புகின்றன... ஆனால் மகாராஷ்டிராவின் அரசியல் அறிந்தவர்களோ நடந்தால் ஆச்சரியம்தான்.. நடக்காமல் போனால் ஆச்சரியம் இல்லைதான் என்கின்றனர்.. ஏனெனில் பிராமணரான தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக்கப்பட்டால் மராத்தியர்கள் என்ன எதிர்வினையையும் ஆற்றக் கூடும் என்பதுதான்.

ஆமாம் அன்று வரலாற்றில் மராத்திய மாவீரன் சிவாஜியையே தாழ்ந்த ஜாதி என பிராமணர்கள் கொதிக்க வைத்தனர்.. இன்று அதே பிராமணர்களின் வம்சாவளியான தேவேந்திர பட்னாவிஸ் மகுடம் சூட்ட மாவீரன் வீர சிவாஜியின் வாரிசுகளான மராத்தியர்கள் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.. வரலாறு எத்தனை விசித்திரமானது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+