மாற்றத்தை விரும்பாத மக்கள்: இரு மாநிலங்களிலும் சொல்லி வைச்ச மாதிரி முடிவுகள்.. இதை நோட் பண்ணீங்களா
மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த முறை இரு மாநிலங்களிலும் ஆளும் தரப்பே ஆட்சியைத் தக்கவைத்துள்ளன. இரு மாநிலங்களிலும் ஆளும் தரப்பு மீது மக்கள் அதிருப்தியாக இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக இரு மாநிலங்களிலும் ஆளும் தரப்பே ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் சமீபத்தில் நடந்தன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன.

எக்ஸிட் போல்: அதைத் தொடர்ந்து பல்வேறு எக்ஸிட் போல் முடிவுகளும் வெளியானது. அதில் ஜார்க்ண்ட் மாநிலத்தில் ஆளும் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது. மறுபுறம் பாஜக அங்கே ஆட்சியை அமைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அங்கு கடும் போட்டி நிலவும் என்றும் பாஜக கூட்டணி நூலிழையில் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதற்கு நேர்மாறான தகவல்களே வெளியானது. முதலில் கொஞ்ச நேரம் இரு தரப்பும் மாறி மாறி முன்னிலையில் இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே எந்தக் கட்சி முன்னிலையில் இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. அது பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளுக்கு நேர் எதிராகவே இருந்தது.
ஜார்கண்ட்: முதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பார்க்கலாம். ஜார்க்கண்டை பொறுத்தவரை அங்கு மொத்தம் 81 இடங்கள் இருக்கும் நிலையில், 41 இடங்களில் வெல்லும் கட்சிக்கு முன்னிலை கிடைக்கும். தற்போது பகல் 12.30 நிலைப்படி 50 இடங்களில் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.
ஜேஎம்எம் கட்சி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இது தவிர ஆர்ஜேடி 5 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 2 இடங்களிலும் முன்னிலை பெற்றது. பாஜக 27 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகள் 3 இடங்களில் முன்னிலையில் மட்டுமே உள்ளன.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் கடும் போட்டி இருக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில், அங்கு பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறுகிறது. பாஜக கூட்டணி அங்கு 214 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் பாஜக மட்டும் 125 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஷிண்டே சிவசேனா 49 இடங்களிலும் என்சிபி 36 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் கூட்டணி மொத்தமாகவே 65 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. உத்தவ் தாக்ரே தரப்பு 28 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், சரத் பவார் காங்கிரஸ் 15 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
மாற்றத்தை விரும்பாத மக்கள்: அதாவது இரு மாநிலங்களிலும் ஆளும் தரப்பிற்கே மீண்டும் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் இரு மாநிலங்களிலும் அதிகளவே வாக்குப்பதிவு நடந்து இருந்தது. பொதுவாக இதுபோல அதிகமாக இருந்தால் மக்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகச் சொல்லப்படும். ஆனால், மக்கள் அரசுக்கு ஆதரவாகவே வந்து வாக்களித்துள்ளது தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. அதாவது இரு மாநிலங்களிலுமே மாற்றத்தை விரும்பாத மக்கள் ஆளும் தரப்பிற்கே மீண்டும் வாக்களித்துள்ளது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications