திடீர் பரபரப்பு.. பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது! என்ன நடந்தது?
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை இன்று திடீரென உடைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதிக்கு அதிகாரிகள் விரைந்துள்ள நிலையில், போலீசாரும் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை திடீரென எப்படி உடைந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் பிரமாண்ட சிலை இன்று உடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று மதியம் 1 மணியளவில் இந்த சிலை உடைந்து இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைந்துள்ள இந்த 35 அடி உயர சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினத்தையொட்டி, ராஜ்கோட் கோட்டையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி இந்த சிலையைத் திறந்து வைத்தார்.
என்ன காரணம்: அப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வந்த நிலையில், இதன் காரணமாகச் சிவாஜி சிலை உடைந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம் மகாராஷ்டிர அரசு சிலை தரமாக இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தவில்லை என்றும் இதன் காரணமாகவே சிலை இப்போது சிலை உடைந்துள்ளதாகவும் அம்மாநில எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
அதேநேரம் சிலை உடைந்ததற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை. இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடன் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அங்கு வன்முறைச் சம்பவம் ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்: இது தொடர்பாக சரத் பவார் என்சிபி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயந்த் பாட்டீலும் மகாராஷ்டிர அரசைச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இதற்கு மாநில அரசே பொறுப்பு. சிலையின் தரத்தை அவர்கள் உறுதி செய்யவில்லை. நிகழ்ச்சியை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். மகாராஷ்டிர அரசு எல்லா வேலைகளுக்கும் கமிஷன் வாங்குவதையே இது காட்டுகிறது" என்றார். மகாராஷ்டிராவில் உள்ள மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான தாக்ரே சிவசேனாவும் இந்த விவகாரத்தில் ஷிண்டே அரசை கடுமையாகச் சாடியுள்ளது.
அதேநேரம் இந்தச் சம்பவம் குறித்து மகாராஷ்டிர அமைச்சர் தீபக் கேசர்கர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "சற்று நேரத்திற்கு முன்பு தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. என்னிடம் இது குறித்த அனைத்து தகவல்களும் இப்போது இல்லை. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். அதே இடத்தில் மீண்டும் சத்ரபதி சிவாஜிக்கு சிலை நிறுவப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications