"நீ பீரியட்ஸா தூரமா போ.. செடில கை வைக்காதே.." மாணவிகளை தடுத்த ஆண் ஆசிரியர்.. நாசிக்கில் அதிர்ச்சி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பள்ளியில் மாதவிடாய் சுழற்சி இருக்கும் மாணவிகளை மரங்களை நடக் கூடாது என ஆசிரியர் ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசில் திரிம்பகேஷ்வர் தாலுக்காவில் உள்ளது தேவ்கவுனில் பெண்களுக்கான பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இது ஒரு ஆசிரம பள்ளியாகும்.
தற்போது மகாராஷ்டிராவில் பெரும்பாலான பள்ளிகளில் தோட்டக் கலை குறித்த பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. அது போல் இந்த பள்ளியிலும் கடந்த 27 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தோட்டக்கலை வகுப்பு நடைபெற்றது. இந்த பள்ளியில் பழங்குடியின மாணவிகளும் படிக்கிறார்கள்.

பள்ளி மாணவிகள்
இதையடுத்து அந்த பள்ளி மாணவிகள் தோட்டத்திற்கு சென்று மரக்கன்றுகளை பள்ளம் தோண்டி, உரங்களை குவித்து நட்டு தண்ணீர் ஊற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து ஏராளமான மாணவிகள் ஆசை ஆசையாய் மரம் நட வந்தனர். அப்போது அங்கு வந்த ஆண் ஆசிரியர் ஒருவர் மரம் நட சென்ற மாணவிகளை நிறுத்துங்கள் என்றார்.

அறிவுரை
உடனே மாணவிகள் ஏதோ அறிவுரைகளை ஆசிரியர் வழங்க போகிறார் என நினைத்து அவரை கவனித்தனர். அப்போது அந்த ஆசிரியர் மாதவிடாய் சுழற்சியில் இருக்கும் மாணவிகள் மரம் நடக் கூடாது. அப்படி நட்டால் மரம் கருகிவிடும் என கூறினார். இதையடுத்து அவர் ஒரு சில மாணவிகளை ஓரமாக நிற்குமாறு கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியின நல துறை
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி பழங்குடியின நலத் துறைக்கு அந்த ஆண் ஆசிரியர் மீது புகார் தெரிவித்தார். சிறுமியின் புகாரின் பேரில் அந்த நலத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நாசிக் மாவட்ட சார் ஆட்சியர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஆசிரியர்
அப்போது அந்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் கூறுகையில் கடந்த ஆண்டு இதேபோல் மாதவிடாய் சுழற்சியில் இருந்த மாணவிகள் நட்ட மரக்கன்றுகள் வளராமல் பட்டு போய்விட்டன. அதனால்தான் தான் அவ்வாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.

500 மாணவிகள்
இந்த பள்ளியில் 500 மாணவிகள் படித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக யாரும் பேச மாட்டார்களாம். அந்த ஆசிரியர்தான் அந்த மாணவிகளுக்கு 80 சதவீத தேர்வு மதிப்பெண்களை வழங்குகிறாராம். அதனால் அவர் மீது புகார் அளித்தால் அந்த மதிப்பெண்களில் கை வைத்துவிடுவேன் என பலரை மிரட்டியுள்ளதாக தெரிகிறது.

மாணவர் சேர்க்கை
இந்த பள்ளியில் மாணவிகளின் சேர்க்கையின் போது அந்த மாணவிகளின் சிறுநீரை கொண்டு மகப்பேறு சோதனை நடத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. ஒரு ஸ்டிரிப்பை கொண்டு மாணவியின் சிறுநீரை அதில் விடுவர். அப்போது ஒரு கோடு வந்தால் அந்த மாணவி கர்ப்பமாக இல்லை என்றும் இரு கோடுகள் வந்தால் அந்த மாணவி கர்ப்பமாக இருக்கிறார் என்றும் அர்த்தம். ஒரு வேளை இந்த டெஸ்டில் பாசிட்டிவ் வந்தால் அந்த மாணவியை பள்ளியில் சேர்க்க மறுப்பும் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதை பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக மறுக்கிறது.












Click it and Unblock the Notifications