பலாத்கார புகார்.. "லிவ் இன்" அக்ரிமெண்ட் உடன் கோர்டிற்கு ஓடிய மும்பை இளைஞர்! கடைசியில் ட்விஸ்ட்
மும்பை: மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் தனது லிவ் இன் பார்ட்னருக்கு எதிராக பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். போலீசாரும் அந்த இளைஞரை விசாரணைக்கு வரச் சொல்லி இருந்தார்கள். இந்தச் சூழலில் அந்த இளைஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு பெரிய ட்விஸ்ட்டாக மாறிவிட்டது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் லிவ் இன் உறவில் பலரும் இருக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் இதுபோல லிவ் இன் உறவில் பலரும் இருக்கிறார்கள்.

அப்படி லிவ் இன் உறவில் இருந்த பெண் தனது பார்ட்னருக்கு எதிராகப் பலாத்கார புகாரை அளித்துள்ளார். ஆனால், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அந்த நபர் தாக்கல் செய்த ஒரு அக்ரிமெண்ட்டை பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள்.
லிவ் இன்: அதாவது 46 வயதான அந்த நபர் மீது லிவ் இன் பார்ட்னர் பலாத்கார புகார் அளித்திருந்த நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அப்போது அவர் லிவ் இன் உறவுக்குள் செல்லும் முன்பு போட்ட ஒப்பந்தத்தை முக்கிய ஆவணமாகச் சமர்ப்பித்து இருக்கிறார். அதில் லிவ் இன் உறவுக்குப் பிறகு பலாத்கார வழக்குப் போடக்கூடாது என்பது தெளிவாக இருந்துள்ளது. இதைப் படித்துப் பார்த்த நீதிபதி அந்த நபருக்கு ஜாமீனும் வழங்கிவிட்டார்.. அதேநேரம் அந்த 29 வயது பெண் லிவ் இன் ஒப்பந்தத்தில் உள்ள கையெழுத்து தன்னுடையது அல்ல என்றும் அது போலி கையெழுத்து என்று மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த பெண் முதியவர்களைப் பராமரிக்கும் கேர் டேக்கராக இருக்கிறார். அந்த 46 வயதான நபர் ஒரு அரசு ஊழியர் ஆவார். நீதிமன்றம் அந்த நபருக்கு ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், அந்த பெண் தனது கையெழுத்தைப் போலியாக யாரோ போட்டுள்ளனர் என்று சந்தேகம் எழுப்பியுள்ளதால் அது தொடர்பாக விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கையெழுத்து போலி: தனது கையெழுத்து போலி என்று சொன்ன அந்த பெண், அந்த நபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தே லிவ் உன் உறவுக்குச் சம்மதிக்க வைத்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், லிவ் இன் உறவில் இருந்த போது தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேநேரம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதை முழுக்க முழுக்க நிராகரித்துள்ளார். அது குறித்து வழக்கறிஞர் கூறுகையில். "இது பொய்யான வழக்கு. அவர்கள் லிவ்-இன் உறவில் இருந்தனர். இருவரும் இதற்கான அக்ரிமெண்டில் கையெழுத்துப் போட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் அந்த பெண் கையெழுத்திட்டு இருக்கிறார். இதை ஆவணங்களைப் பார்த்தால் தெளிவாகப் புரியும்" என்றார்.
7 பாயிண்டு ஒப்பந்தம்: இரு வரும் கையெழுத்திட்டதாகச் சொல்லப்படும் அந்த லிவ் ஒப்பந்தத்தில் மொத்தம் 7 பாயிண்டுகள் இருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் 1, 2024 முதல் ஜூன் 30 2025 வரை இருவரும் லிவ் இன் உறவில் இருப்பார்கள் என்பது முதல் பாயிண்டு. இந்த காலகட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது என்றும் அமைதியாக தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும் என்பது இரண்டாவது பாயிண்டு.
இந்த நபரின் வீட்டில் தான் பெண் இருக்க வேண்டும் என்றும் அந்த நபரின் நடத்தையில் சந்தேகம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அந்த பெண் ஒரு மாத கால நோட்டீஸ் கொடுத்துவிட்டுப் பிரிந்துவிடலாம் என்றும் மூன்றாவது பாயிண்டில் கூறப்பட்டுள்ளது. பெண்ணின் உறவினர்கள் வீட்டிற்கு வரக் கூடாது என்பது அடுத்த பாயிண்டு.
கருவுற்றால் பொறுப்பில்லையாம்: அந்த ஆணுக்குப் பெண் எந்தவிதமான தொல்லைகளையும் மன வேதனையையும் ஏற்படுத்தக்கூடாது என்பது ஐந்தாவது பாயிண்டு. இந்தக் காலகட்டத்தில் பெண் கருவுற்றால் அதற்கு ஆண் பொறுப்பேற்க மாட்டார் என்று ஆறாவது பாயிண்டில் கூறப்பட்டுள்ளது. ஆணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினால் அதற்கு அந்தப் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது கடைசி பாயிண்டு. இதை எல்லாம் படித்துப் பார்த்து ஏற்றுக் கொண்டே அந்த பெண் லிவ் இன் உறவில் வந்ததால் பலாத்கார வழக்கு செல்லாது என்பதே குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications