மும்பையில் பட்டப்பகலில் 17 பள்ளி குழந்தைகளை கடத்திய மர்ம நபர்.. வீடியோ வெளியிட்டு மிரட்டல்! திக்திக்
மும்பை: மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் 17 பள்ளிக் குழந்தைகளை மர்ம நபர் ஒருவர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துரிதமாகச் செயல்பட்டதில் 17 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் மிகப் பயங்கரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒருவர் 17 குழந்தைகளைப் பணய கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார். மதியம் 1.30 மணியளவில் போலீசாருக்கு இது குறித்து தகவல் கிடைத்துள்ளது. யாரோ ஒருவர் குழந்தைகளைப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கடத்தல்
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் ரோஹித் ஆர்யா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரோஹித் ஆர்யா மும்பையில் உள்ள பிரபல போவாய் ஸ்டுடியோவில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு ஆடிஷன் என சொல்லி குழந்தைகளை அழைத்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பி பெற்றோர்களும் குழந்தைகளை அழைத்து வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே அங்கு ஆடிஷன் நடந்துள்ளது. சுமார் 100 குழந்தைகள் இதற்காக வந்த நிலையில், அதில் 80 குழந்தைகளைத் திருப்பி அனுப்பிவிட்டானாம். மற்ற 17 குழந்தைகள் மட்டும் ஆர்யா பிடித்து வைத்துள்ளார். குழந்தைகளைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த போது ரோஹித் ஆர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மிரட்டல்
அதில் அவர், "நான் ரோஹித் ஆர்யா. தற்கொலை செய்துகொள்வதற்குப் பதிலாக, நான் இப்போது சில குழந்தைகளைப் பணய கைதிகளாகப் பிடித்துள்ளேன். எனக்குப் பெரிய கோரிக்கைகள் எதுவும் இல்லை. மிகவும் எளிமையான, தார்மீக ரீதியான கோரிக்கைகள் தான் உள்ளன. நான் சிலரிடம் பேச விரும்புகிறேன்.. சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.
பரபரப்பு
அவர்களின் பதில்களுக்கு என்னிடம் எதிர் கேள்விகள் இருந்தால், அதைக் கேட்க விரும்புகிறேன். ஆனால் இந்தப் பதில்கள் எனக்கு வேண்டும். வேறு எதுவும் வேண்டாம்.. நான் ஒரு பயங்கரவாதி இல்லை.. பணமும் கேட்கவில்லை. மோசமாக எதையும் நான் விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார். சிலரிடம் பேச வேண்டும் என்று கூறியிருந்தாலும், அந்த வீடியோவில் யாருடன் பேச வேண்டும் என்பது குறித்து அவர் எதையும் சொல்லவில்லை. இது வீடியோ வெளியாகி மகாராஷ்டிரா முழுக்க பரபரப்பைக் கிளப்பியது.
மும்பை போலீஸ் அதிரடி
இந்தத் தகவல் கிடைத்தவுடன் துரிதமாகச் செயல்பட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதலில் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். குழந்தைகளை விட்டுவிட்டுச் சரணடைந்துவிடும்படி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், அந்த நபர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் போலீசார் அதிரடி ஆபரேஷனை நடத்தினர்.
பாத்ரூம் வழியாக உள்ளே நுழைந்த போலீசார், ஆர்யாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவர் சுருண்டு விழுகவே, அங்கிருந்த குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர். கடத்தப்பட்ட எல்லாக் குழந்தைகளும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஆர்யா, அருகே உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் போலீசார் இப்போது அடுத்தகட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications