மகாராஷ்டிரா துணை முதல்வராகும் சுனேத்ரா? அஜித் பவார் இறந்ததால் மனைவிக்கு மகுடம்! என்சிபி முடிவு
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் நேற்று விமான விபத்தில் பலியானார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் மகாராஷ்டிராவின் அடுத்த துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவியான சுனேத்ரா பவார் பொறுப்பேற்கும்படி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருகின்றன. இதில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். கூட்டணியில் உள்ள சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக உள்ளார்.

அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான அஜித் பவாரும் துணை முதல்வராக இருந்தார். இந்நிலையில் தான் நேற்றைய விமான விபத்தில் அஜித் பவார் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்துள்ளார். இந்நிலையில் தான், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை யார் வழிநடத்துவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஜித் பவார் வரலாறு
ஏனென்றால் தேசியவாத காங்கிரஸ் கட்சியை மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் வழிநடத்தி வந்தார். கடந்த 2023ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா - பாஜக ஆட்சி அமைந்தது. அப்போது உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார், பாஜக - சிவசேனா கூட்டணிக்கு சென்றார்.
சித்தப்பாவான சரத்பவாரை எதிர்த்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் தனியே பிரிந்து பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்து மீண்டும் துணை முதல்வரானார். அதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. உண்மையான தேசியவாதகாங்கிரஸ் கட்சி அஜித் பவார் தான் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
சரத் பவாருடன் மீண்டும் நெருக்கம்
கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் புனே உள்பட சில இடங்களில் அஜித் பவார் - சரத்பவார் ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இதனால் விரைவில் இருகட்சிகளும் ஒன்றாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித் பவார் விமான விபத்தில் இறந்துள்ளார்.
இதனால் தேசியவதா காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சரத்பவார் வசம் மீண்டும் கட்சி செல்லுமா? இல்லாவிட்டால் அஜித் பவார் மனைவி அல்லது அவரது ஆதரவாளர்கள் கட்சியை வழிநடத்துவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஜித் பவார் மனைவி சுனேத்ரா
இந்நிலையில் தான் அஜித் பவார் மனைவியான சுனேத்ரா பவாரை கட்சியின் தலைவராக்க சீனியர் லீடர்கள் முடிவு செய்துள்ளனர். அஜித் பவாரின் மரணம் அனுதாபத்தை ஏற்படுத்தும். இதனை வைத்து விரைவில் சுனேத்ரா பவாரால் சக்திவாய்ந்த தலைவராக மாற முடியும் என்று சீனியர் தலைவர்கள் நம்புகின்றனர்.
அதன்படி தேசியவாத கட்சியின் தலைவராக சுனேத்ரா பவார் விரைவில் பொறுப்பேற்பார். அதுமட்டுமின்றி அஜித் பவார் விட்டு சென்ற துணை முதல்வர் பதவியிலும் அவரை அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாராமதி சட்டசபை தொகுதியில் போட்டி
துணை முதல்வரான பிறகு அஜித் பவார் மறைவால் பாராமதி சட்டசபை தொகுதி காலியாகி உள்ளது. இந்த தொகுதியில் சுனேத்ரா பவாரை களமிறக்கி வெற்றி பெற வைக்கவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுவரை கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் பிரபுல் படேல் கட்சியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக உள்ள பிரபுல் பட்டேல், சாகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே மற்றும் சுனில் தட்கரே ஆகியோர் சுனேத்ரா பவாருடன் பலகட்டங்களாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சுனேத்ராவின் பின்னணி என்ன?
சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அவருக்கு போதிய அளவு அரசியல் அனுபவம் இல்லை. கடந்த 2024ம் ஆண்டில் தான் அவர்அரசியலுக்குள் வந்தார். அப்போது அவர் தனது இளைய மாமனாரான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து பாராமதி நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்கினார்.
இந்த தொகுதியில் சுப்ரியா சுலே 7 லட்சத்து 32 ஆயிரத்து 312 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். சுனேத்ரா பவார் 5,73,979 வாக்குகள் மட்டுமே பெற்று 1,58,33 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பிறகு தான் அவர் ராஜ்யசபா எம்பியானார்.
ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள பல தலைவர்களும் சுனேத்ரா பவாவை விட அரசியல் அனுபவம் அதிகம் கொண்டவர்கள். . அஜித் பவார்மறைவால் ஏற்பட்ட அனுதாபம் சுனேத்ரா பவாருக்கு சாதகமாக உள்ளது.
இதுபற்றி மகாராஷ்டிர மின்சாரத்துறை அமைச்சர் நாரஹரி ஜிர்வால் கூறுகையில், ‛‛பொதுமக்கள் சுனேத்ரா பவாரை மாநில அமைச்சரவையில் சேர்க்க விரும்புகின்றனர்'' என்று கூறினார். இதன்மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், அஜித் பவார் விட்டு சென்ற துணை முதல்வர் பதவியையும் அவரது மனைவி சுனேத்ராவை ஏற்க வைக்க கட்சியினர் ஆர்வமாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications