பால்கரில் 2 சாமியார்கள் அடித்து கொலை- மதபிரச்சனை எதுவுமே இல்லை: மகா. முதல்வர் உத்தவ் தாக்கரே
மும்பை: பால்கரில் 2 சாமியார்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதம் சார்ந்த பிரச்சனை எதுவும் இல்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பால்கரில் சில நாட்களுக்கு முன்னர் 2 சாமியார்களும் அவர்களை அழைத்துச் சென்ற ஓட்டுநர் ஒருவரும் பொதுமக்களால் அடித்தே கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பால்கர் பகுதியில் குழந்தை திருடர்கள் சுற்றுவதாகவும் மனிதர்களை கடத்தி உடல் உறுப்புகளை திருடுவதாகவும் ஒரு வதந்தி பரவியது. இந்த வதந்தியின் அடிப்படையில்தான் 2 சாமியார்களையும் சந்தேகத்துடன் பொதுமக்கள் மடக்கி தாக்கி உள்ளனர். இதில்தான் சாமியார்களும் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர்களிடம், இதில் மத பிரச்சனை எதுவும் இல்லை. குஜராத்தின் சூரத்துக்கு செல்ல முயன்ற போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த கும்பல் படுகொலை சம்பவம் தொடர்பாக 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர்தான் முதன்மை குற்றவாளிகள் என்றும் அவர்களின் தூண்டுதலிலேயே இப்படுகொலை நிகழ்ந்ததாகவும் மகாராஷ்டிரா போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications