இந்த முறை மகாராஷ்டிரா நமக்குதான்.. பக்கா பிளானுடன் பிரதமர் மோடியை களமிறக்குகிறது பாஜக!
மும்பை: மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று தனது தேர்தல் பரப்புரையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்குகிறார். ஏற்கெனவே கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, இந்த தேர்தலில் மகாராஷ்டிராவை வசப்படுத்த புதிய திட்டத்துடன், பிரதமர் மோடியை பாஜக களமிறக்கியுள்ளது.
மகாராஷ்டிரா தேசிய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருக்கிறது. இங்கு ஏற்கனெவே சிவசேனா ஆட்சிதான் நடைபெற்று வந்தது. ஆனால் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, சிவசேனாவிலிருந்து ஷிண்டே தரப்பில் சில எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து வந்து புதிய சிவசேனாவை உருவாக்கினார்கள். அதேபோல தேசியவாத காங்கிரசிலும் அஜித் பவார் தரப்பில் சில எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து வந்து புதிய தேசியவாத காங்கிரஸை உருவாக்கினார்கள். இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் சேர்ந்து 'மகாயுதி' கூட்டணியை உருவாக்கி ஆட்சியை அமைத்துள்ளன.

ஆனால் இந்த கூட்டணி கடந்த லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. உத்தவ் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியான மகாவிகாஸ்தான் லோக்சபா தேர்தலில் மாஸ் காட்டியது. எனவே, இக்கூட்டணிக்கு டஃப் கொடுக்கும் விதமாக பாஜக தற்போது பிரதமர் நரேந்திர மோடியை பிரசாரத்தில் இறக்கியுள்ளது. இன்று தொடங்கி நவ.14ம் தேதி வரை பிரதமர் மோடி மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வார்.
இது குறித்து அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே கூறுகையில், "எங்களுக்கு போட்டியாக உள்ள மகாவிகாஸ் அகாடி கூட்டணியை தோற்கடிக்க பிரதமரை நாங்கள் களமிறக்கியுள்ளோம். அவர் சிறந்த நட்சத்திர பேச்சாளர். நவ.8ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை மோடி பரப்புரை மேற்கொள்வார்" என்ற கூறியுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கும் பிரதமர் மோடியை பாஜக களமிறங்கியிருந்தது. புனே , நாசிக், நாந்தேட், சந்திராபூர், ராம்டெக், வார்தா, பர்பானி, கோலாப்பூர், சோலாப்பூர், சதாரா, மாதா, தாராஷிவ், லத்தூர், அகமதுநகர் என 18 தொகுதிகளில் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டிருந்தார். ஆனால் பாஜக சதாரா தொகுதியில் மட்டுமே வென்றது. அதன் கூட்டணியான ஷிண்டே தரப்பு சிவசேனா கல்யாண் தொகுதியை கைப்பற்றியிருந்தது. மொத்தமாக பார்த்தால், 2019ல் 23 தொகுதிகளில் வென்றிருந்த பாஜக 2024ல் வெறும் 9 தொகுதிகளை மட்டுமே வசப்படுத்தியிருந்தது. கூட்டணியாக பார்த்தால் 17 தொகுதிகளில மட்மே வெற்றி பெற்றிருந்தது.
இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள், சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்க கூடாது என்பதற்காக புதிய வியூகங்களுடன் மகாயுதி கூட்டணி களமிறங்கியுள்ளது. அந்த வகையில் பிரசாரத்தின் முதல் நாளான இன்று மோடி, வடக்கு மகாராஷ்டிராவின் துலே மற்றும் நாசிக்கில் நடைபெறும் பேரணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மிக வலுவானதாக இருக்கின்றன.
முஸ்லிம்கள் மற்றும் மராட்டியர்களின் கூட்டணிதான் கடந்த தோல்விக்கு காரணம். எனுவே இதை உடைக்க முடிந்த வரை பாஜக தீவிரமாக முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications