பிரமோத் மகாஜன் கொலையில் மிகப்பெரிய சதி.. 18 ஆண்டுகளுக்கு பிறகு பகீர் கிளப்பும் பூனம் மகாஜன்!
மும்பை: பாஜக தலைவரும், முன்னாள் எம்.பியுமான பூனம் மகாஜன், முன்னாள் மத்திய அமைச்சரும், தனது தந்தையுமான பிரமோத் மகாஜன் 2006ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன், அவரது சொந்தத் தம்பியால் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். பிரமோத் மகாஜனை மும்பை வொர்லியில் உள்ள அவரது அபார்ட்மெண்டில் வைத்து சுட்டார் அவரது தம்பி பிரவீன் மகாஜன். இதில் மூன்று குண்டுகள் கல்லீரல், கணையம், சிறுகுடலுக்குள் புகுந்து பெருமளவில் ரத்தம் வெளியேறியது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரமோத் மகாஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று முறை அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. ஆனாலும் அவரது உடல்நிலை தேறவில்லை. அவரது சிறுநீரகம் இயங்காததால் தொடர்ந்து டையலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் மே 3 ஆம் தேதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
பின்னர், பிரமோத் மகாஜனின் தம்பி பிரவின் மகாஜன் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார். 2010 ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த பிரவின் மாரடைப்பால் இறந்தார். பிரமோத் மகாஜன் உயிரிழந்து 18 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தனது தந்தை கொலை செய்யப்பட்டதில் மிகப்பெரிய சதி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன்.
“பிரமோத் மகாஜன் கொலை ஒரு மிகப்பெரிய சதி. அற்ப காரணங்களை கூறி இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டது. அண்ணன் தம்பி சண்டை என கூறப்பட்டது. இதில் உண்மையில்லை. இது பணத்திற்காகவோ, பொறாமை காரணமாகவோ அல்லது குடும்ப விஷயத்திற்காகவோ ஏற்பட்டது அல்ல.இறுதியில் இன்றோ நாளையோ உண்மை வெளிவரும்” எனத் தெரிவித்துள்ளார். முழுமையான விசாரணைக்காக உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவேன் என்றும் கூறியுள்ளார் பூனம்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பூனம் மகாஜன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பூனம், பாஜக சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இரண்டு முறை எம்.பியாக இருந்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மும்பை நார்த் சென்ட்ரலில் இருந்து அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது. சட்டசபை தேர்தலிலும் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூனம், தனது தந்தை மரணத்தில் சதிவலை இருந்ததாக குற்றம்சாட்டி உள்ளது பாஜகவினர் மட்டுமல்லாது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாஜக மூத்த அமைச்சர் சுதிர் முங்கந்திவார் கூறுகையில், “சதி தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் பூனமிடம் இருந்தால், அதை விசாரணைக்கு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
"பூனம் மகாஜன் இந்தக் கூற்றை எந்தச் சூழ்நிலையில் எழுப்பினார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தக் கேள்வியை எழுப்புவதற்கான நேரம் இதுவல்ல, ஆனால் இது ஒரு டிவி நிகழ்ச்சிக்கு மைலேஜ் தரக்கூடும்." என்று பிரமோத் மகாஜனின் சகோதரரும், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியைச் சேர்ந்த தலைவருமான பிரகாஷ் மகாஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications