விடைபெற்றார் இந்தியாவின் நைட்டிங்கேல்.. முழு அரசு மரியாதையுடன் தகனம்.. பிரதமர் மோடி இறுதி அஞ்சலி
மும்பை : மறைந்த பிரபல பாடகியும் பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பிரபலா பாடகியான லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா மற்றும் நிமோனியா உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜனவரி 8ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாடகி லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தேறி விட்டதாகவும், வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் இரண்டு நாட்களுக்கு முன் டாக்டர்கள் கூறி இருந்தனர். ஆக்சிஜன் மட்டுள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைப்பு தருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்த நிலையில் இன்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.

தீவிர சிகிச்சை
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பல நாட்களாக ஐசியு.,வில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. படிப்படியாக தேறி வந்த நிலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை இன்று மீண்டும் மோசமடைந்துள்ளது எனவும், இதன் காரணமாக மீண்டும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் வெளியானது. தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

லதாவின் உயிர் பிரிந்தது
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அடுத்தடுத்து அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்ததாகவும், இதையடுத்து அவர் உயிரிழந்ததாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனை கூறியது. பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இசை அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி இறுதி அஞ்சலி
மாலையில் மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின் வீட்டிலிருந்து அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் மும்பை சென்ற பிரதமர் நரேந்திர மோடி லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சிவாஜி பார்க்கில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications