"இனி ரஷ்ய கச்சா எண்ணெய் வேண்டாம்.." திடீரென நிறுத்திய ரிலையன்ஸ் நிறுவனம்.. என்ன காரணம்?
மும்பை: ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கிடையே திடீர் மாற்றமாக ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை ரிலையன்ஸ் நிறுவனம் நிறுத்துகிறது. சில ஆண்டுகளாகவே அதிகளவில் ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்கிய ரிலையன்ஸ், திடீரென அதை நிறுத்த என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியா நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே ரஷ்யாவிடம் இருந்து கணிசமான அளவுக்குக் கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்து வந்தது. இருப்பினும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உக்ரைன் போரை தொடரவே செய்யும் என டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.

ரிலையன்ஸ்
இதற்கிடையே முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் சுத்திகரிப்பு ஆலை ஒன்று இருக்கிறது. இங்குச் சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் நேரடியாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும். அந்த ஆலைக்கு ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தான் ரஷ்யா நிறுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 20ம் தேதி முதலே ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாம்.
திடீர் மாற்றம்
இதை ரிலையன்ஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. மேலும், டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த ஆலையில் ரஷ்ய அல்லாத கச்சா எண்ணெய் மட்டுமே சுத்திகரிக்கப்படும் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.. 2022 உக்ரைன் போருக்குப் பிறகு சலுகை விலையில் கிடைக்கும் ரஷ்யக் கச்சா எண்ணெய்யை ரிலையன்ஸ் அதிகளவில் வாங்கி குவித்த நிலையில், இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜாம்நகரில் உள்ள இந்த ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் தான் உலகின் மிக பெரிய சுத்திகரிப்பு நிலையமாகும். இங்கு 1.4 மில்லியன் பீப்பாய்கள் சுத்திகரிப்பு செய்ய முடியும்.. அந்த வளாகத்தில் ஏற்றுமதிக்கு மட்டும் தானமாக ஒரு சுத்திகரிப்பு நிலையமும், உள்நாட்டுப் பயன்பாட்டிற்குத் தனியாக ஒரு சுத்திகரிப்பு நிலையமும் செயல்படுகின்றன. அதில் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான சுத்திகரிப்பு நிலையத்தில் ரஷ்யா கச்சா எண்ணெய் பயன்படுத்தப்படாதாம்.
ரிலையன்ஸ் சொல்வது என்ன
இது தொடர்பாக ரிலையன்ஸ் தரப்பில் கூறுகையில், "நவம்பர் 20 முதல் எங்கள் ஏற்றுமதி சுத்திகரிப்பு நிலையத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். டிசம்பர் முதல் அங்கு ரஷ்யா அல்லாத கச்சா எண்ணெய் மட்டுமே சுத்திகரிக்கப்படும். சர்வதேச தடைகளுக்கு இணங்கி ரிலையன்ஸ் செயல்படும். மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவோம்" என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்ய கச்சா எண்ணெய்யில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான விதிகளை விதித்துள்ளது. அதைத் தொடர்ந்தே ரிலையன்ஸ் இந்த முடிவுகளை எடுத்துள்ளது. ஏனென்றால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஐரோப்பா ஒரு முக்கிய சந்தையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை ஜனவரி 2026ல் நடைமுறைக்கு வரும் நிலையில், அதற்குள் ரிலையன்ஸ் தனது உற்பத்தியை மாற்றி அமைத்துள்ளது.
பின்னணி
ரிலையன்ஸ் உட்பட இந்திய நிறுவனங்கள் உக்ரைன் போருக்கு முன்பு ரஷ்யாவிடம் பெரியளவில் கச்சா எண்ணெய் வாங்கியதில்லை. ஆனால், ரஷ்யா போர் வெடித்த பிறகு, உலகின் பல நாடுகள் ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்க மறுத்தது. அப்போது தான் இந்திய நிறுவனங்கள் ரஷ்யா பக்கம் திரும்பியது. சலுகை விலையில் இந்தியாவுக்கு ரஷ்யக் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டது..
குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம் அதிகளவில் இந்தச் சலுகை கச்சா எண்ணெய்யை வாங்கியது. இந்தச் சூழலில் தான் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்ய எண்ணெய்யைத் தனது ஏற்றுமதிக்கான சுத்திகரிப்பு நிலையத்தில் பிராசஸ் செய்வதை நிறுத்தியுள்ளது. அதன்படி இனி ரஷ்ய கச்சா எண்ணெய் உள்நாட்டுத் தேவைக்கான சுத்திகரிப்பு நிலையத்திலேயே பிராசஸ் செய்யப்படுமாம்.












Click it and Unblock the Notifications