தூங்க முடியாமல் தவிக்கும் சல்மான் கான்.. மீட்டிங் அனைத்தும் ரத்து! பாபா சித்திக் படுகொலையால் அதிர்ச்சி
மும்பை: மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் தலைவரான பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது படுகொலைக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்று இருக்கிறது. சல்மான் கானுக்கு உதவியதாலேயே பாபா சித்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தனது நண்பரை இழந்த சல்மான் கான் தூங்க முடியாமல் தவித்து வருவதாகவும் மீட்டிங் எல்லாம் ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான என்சிபி கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

படுகொலை: அன்று இரவு பாபா சித்திக் தனது மகனின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், பாபா சித்திக் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் பாபா சித்திக்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மும்பையின் பாந்த்ரா பகுதியில் இந்த இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாபா சித்திக் கொல்லப்பட்ட தகவல் கிடைத்தவுடன் சல்மான் கான் நேரடியாக மருத்துவமனைக்கே வந்துவிட்டார். அப்போது சல்மான் கான் இந்தி பிக்பாஸ் சூட்டிங்கில் இருந்தார். சித்திக் கொலை குறித்த தகவல் கிடைத்தவுடன் சல்மான் கான் ஷூட்டிங்கை கூட ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு விரைந்துவிட்டார். இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சல்மான் கான்: ஏற்கனவே கடந்த சில மாதங்களாக சல்மான் கானுக்கு புதிது புதிதாகக் கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த படுகொலை சல்மான் கானை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது. இதனால் அவர் அடுத்த சில நாட்களுக்கு எல்லா ஷூட்டிங்களையும் ரத்து செய்துள்ளார். மேலும், தனது மீட்டிங்களையும் கூட ரத்து செய்துள்ளாராம்.
தூங்க முடியல: இந்த பாபா சித்திக், சல்மான் கானின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பல நேரங்களில் சல்மான் கானுக்கு உதவியுள்ளார். அப்படிப்பட்ட நெருங்கிய நண்பரை இழந்த சோகத்தில் இருந்து சல்மான் கானால் மீளவே முடியவில்லையாம். நண்பரின் இழப்பால் கடந்த சில நாட்களாகத் தூங்கக் கூட முடியாமல் அவர் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விவரம் அறிந்த சிலர் கூறுகையில், "சல்மான் கானால் இந்த இழப்பை ஏற்கவே முடியவில்லை. அதேநேரம் இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட எல்லாமே சரியாக நடப்பதை அவர் செல்போன் மூலம் உறுதி செய்து வருகிறார்.. ஏற்கனவே சல்மான் கான் தனது ஷூட்டிங் உள்ளிட்ட எல்லா சந்திப்புகளையும் ரத்து செய்துவிட்டார்" என்று தெரிவித்தார்.
என்ன காரணம்: இந்த படுகொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கேங் பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த கேங்கை சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "சல்மான் கான், இந்த போரை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை.. ஆனால் நீங்கள் எங்கள் சகோதரருக்குத் தீங்கு விளைவித்தீர்கள். அரசியல் மற்றும் அவரது தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாருடனும் பகை இல்லை.. ஆனால் சல்மான் கான் மற்றும் தாவூத் கும்பலுக்கு உதவுபவர்கள் யாராக இருந்தாலும் பதிலடி கொடுப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிஷ்னோய் சமூகத்தினர் அரிய வகை மானான கலைமானை (blackbucks) தெய்வமாக வழிபடுவார்கள். 1998ல் ராஜஸ்தான் சென்றிருந்த போது அந்த மான்களை சல்மான் கான் வேட்டையாடியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், பிஷ்னோய் கேங் இதற்காகவே சல்மான் கானை கொல்ல முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications