சிவசேனாவை பார்த்து உஷாரான சரத் பவார்.. தேசியவாத காங்கிரஸின் அனைத்து பிரிவுகளும் அதிரடி கலைப்பு
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்து துறைகள் மற்றும் பிரிவுகளையும் கலைப்பதாக சரத் பவார் அறிவித்து இருப்பது மகராஷ்டிர அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 288 இடங்களில் பாஜகவுக்கு 106 இடங்கள் கிடைத்தன. பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

அணி தாவல்
இந்த நிலையில் கடந்த ஜூன் 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அடுத்தடுத்து சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்ததால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது.

உத்தவ் தாக்கரே பதவி விலகல்
இதனை தொடர்ந்து ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரேவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆளுநரின் நோட்டீசை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தனது கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்ட உத்தவ் தாக்கரே, சட்டசபையில் போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே
இதனை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் வெளியானது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என்று தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரது ஆதரவு சிவசேனா எம்.எல்.ஏக்கள் கோவா விடுதியில் குத்தாட்டம் போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

எம்.பிக்களும் அணிதாவல்
ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து சிவசேனா கட்சியின் நகராட்சி, ஊராட்சி உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர்களும் அவருக்கு ஆதரவளித்தனர். அதேபோல் அக்கட்சியை சேர்ந்த எம்.பிக்களும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவளித்துள்ளனர். இதனால் ஆட்சியை மட்டுமின்றி கட்சியிலும் அதிகாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் உத்தவ் தாக்கரே.

உஷாரான சரத் பவார்
சிவசேனாவை போலவே உத்தரவ் தாக்கரேவுடன் கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு துறை மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தலாம் என்று தகவல் வெளியான நிலையில், முன்னெச்சரிக்கையாக கட்சியின் அனைத்து பிரிவுகள், துறைகளை கலைப்பதாக அறிவித்து இருக்கிறார் சரத் பவார்.

பிரஃபுல் பட்டேல்
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரஃபுல் பட்டேல் ட்விட்டரில் தெரிவித்து இருப்பதாவது, சரத் பவாரின் ஒப்புதலை ஏற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பு, இளைஞர் அமைப்பு, மாணவர் அமைப்புகளை கலைத்து இருப்பதாக அவர் கூறி இருக்கிறார். இந்த உத்தரவு மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில பிரிவுகளுக்கு பொருந்தாது எனவும் அவர் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications