செம நியூஸ்.. நாட்டிலேயே முதன் முறையாக.. மும்பையில் திருநங்கைகளுக்கான பள்ளி தொடக்கம்!
மும்பை: இந்தியாவிலேயே முதன் முறையாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திருநங்கைகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அழைக்கப்படும் திருநங்கைகளுக்கு நமது சமூகம் இன்னும் உரிய மதிப்பை கொடுப்பதில்லை.
கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமை இல்லாவிடிலும் குறைந்தபட்ச இட இதுக்கீடு கூட கிடைக்காத நிலையில் பல திருநங்கைகள் தள்ளாடி வருகின்றனர்.

திருநங்கைகளுக்கான பள்ளி
தற்போது நாட்டில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாட்டிலேயே முதன் முறையாக திருநங்கைகளுக்கான பள்ளி திறக்கப்பட்டுள்ளன. மகா சக்தி அறக்கட்டளை சார்பில் இந்த பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 25 திருநங்கைகள் இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

25 திருநங்கைகள்
இந்த திருநங்கைகளுக்கு ஒரு திருநங்கை ஆசிரியர் நியமிக்கப்பட்டு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. தினமும் குறிப்பிட்ட நேரம் 25 திருநங்கைளும் ஆர்வமுடன் கல்வி பயின்று வருகின்றனர். சமூகத்தில் மிகவும் கேலி பொருளாக பார்க்கப்படும் திருநங்கைளுக்கு பள்ளி அமைத்து கல்வி கற்றுக் கொடுக்கும் மகா சக்தி அறக்கட்டளைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கவுரவமாக வாழ்வோம்
''வாழ்க்கையில் கேலி, கிண்டல், அவமானங்களை அதிகம் பார்த்த எங்களுக்கு பள்ளியில் படிப்பது மிகவும் வித்தியாசமாக உள்ளது. இதேபோல் நாட்டின் அனைத்து பகுதிகளும் பள்ளிகள் திறந்தால், எங்களுக்கு உத்வேகம் கிடைக்கும். மற்றவர்களை போல் நாங்களும் கவுரவமாக வாழ்வோம் '' என்று பள்ளியில் பயிலும் திருநங்கைகள் கண்ணீர் பெருக்குடன் கூறினார்கள்.

தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகை
மும்பையில் உள்ளது போன்று அனைத்து மாநிலங்களிலும் திருநங்கைகளுக்கான பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு எப்போதும் அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது. அரவாணிகள் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் கருணாநிதி ஆட்சியில் திருநங்கைகள் என்று பெயர் மாற்றப்பட்டது. திருநங்கைகளை 2015-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. தற்போதும் அரசு நகர பேருந்துகளில் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications