ஆபாச படங்களை தயாரித்த.. ஷில்பா ஷெட்டியின் கணவர்.. அதிரடியாக கைது செய்த மும்பை போலீஸ்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி, இவர் தமிழில் பிரபுதேவா உடன் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவரது கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான ராஜ் குந்திராவை ஆபாசப் படங்களைத் தயாரித்த வழக்கில் மும்பை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ராஜ் குந்த்ரா
ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாகவும் போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த விஷயத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் இதில் ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி என்றும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது
பல மணி நேர விசாரணைக்குப் பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குற்றவாளி என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "பிரிட்டன் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கெண்ட்ரிங் என்ற நிறுவனத்தில் ராஜ் குந்த்ரா ரூ 10 கோடி வரை முதலீடு செய்திருந்தார். இந்த வழக்கில் உமேஷ் என்ற நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபாசப் படங்கள்
ஆபாசப் படங்கள் தொடர்பாக குந்த்ராவிற்கும் உமேஷுக்கும் இடையில் பணப் பரிவர்த்தனை நடந்ததுள்ளன. இது குறித்து இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டாவது எஃப்.ஐ.ஆரில் தான் ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளார். இவர்கள் உருவாக்கும் ஆபாச வீடியோக்கள் சந்தா முறையில் இயங்கும் சில செயலிகளில் விற்பனை செய்யப்படுகிறது" என போலீஸ் தரப்பில் கூறப்பட்டன.

முதல்முறை இல்லை
முன்னதாக இந்த ஆபாசப் படங்கள் வழக்கில் ஆண் மற்றும் பெண் மாடல்கள், ஒன்பது தயாரிப்பாளர்களை மும்பை போலீஸ் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களில் பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவரது பெயர் தொடர்ந்து அடிப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications