மும்பை புதிய மேயர் யார்? இது லிஸ்ட்லயே இல்லையே! பாஜகவுக்கே தண்ணி காட்டும் ஏக்நாத் ஷிண்டே
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக பாஜக - (ஏக்னாத் ஷிண்டே) சிவசேனா கூட்டணி மும்பையை கைப்பற்றியுள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிவசேனா அதிகாரத்தில் பங்கு கேட்டு வருகிறது. அதாவது இரண்டரை ஆண்டுகள் அதுவும் முதல் இரண்டரை ஆண்டுகள் மும்பை மேயர் பதவியை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என ஏக்னாத் ஷிண்டே கூறியிருப்பது பாஜகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுமட்டும் இன்றி தன் பக்கம் உள்ள கவுன்சிலர்களை பாஜக பணம் கொடுத்து இழுத்துவிடக் கூடாது என்பதற்காக ஏகனாத் ஷிண்டே ரிசார்ட் அரசியலை கையில் எடுத்துள்ளார். இதற்காக ஏக்னாத் ஷிண்டே கட்சியின் கவுன்சிலர்கள் மும்பையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்
மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், மும்பையை பாஜக கூட்டணி பிடித்தது. நாட்டின் நிதி தலைநகர் என்று வர்ணிக்கப்படுவதாலும், மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தொகை கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடிக்கு மேல் என்பதாலும், இந்த மாநகராட்சியை பிடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.
30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடமிருந்து பாஜக அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக - 89, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) - 29 இடங்களில் வெற்றி பெற்றன. உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 65 இடங்களும், எம்என்எஸ் - 6 இடங்களும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கு - 24 இடங்களும் கிடைத்தன.
மும்பை மேயர் யார்?
அகில இந்திய மஜ்லிஸ் 8, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் - 3, சமாஜ்வாதி - 2, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 1 இடங்களை கைப்பற்றின. பாஜக கூட்டணி மும்பை மாநகராட்சியை பிடித்தாலும், அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மைக்கு 114 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணிக்கு 118 கவுன்சிலர்களின் ஆதரவு உள்ளது.
ஏக்நாத் ஷிண்டே ஆதரவுடன் மட்டுமே மேயர் பதவியை கைப்பற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, மும்பையில் மாநகராட்சி மேயர் பொறுப்பை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பாஜகவிடம் கோரிக்கை வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைப்பு
மும்பையில் சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகள் மேயர் பதவி சிவசேனாவிற்கு வேண்டும் என்று போர்கொடி தூக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் கூறுகையில், "பாஜகவிடம் மேயரை நியமிக்க போதுமான எண்ணிக்கையில் கவுன்சிலர்கள் இல்லை. எனவே, அந்த பதவியை சிவசேனாவிற்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்" என்றனர்.
இந்த பரபரப்புக்கு நடுவே ஏக்நாத் ஷிண்டே கட்சியின் கவுன்சிலர்கள் மும்பையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்கள் கட்சியின் கவுன்சிலர்கள் வேறு பக்கம் சாயாமல் இருக்கவும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் ஏக்நாத் ஷிண்டே இந்த ரிசார்ட் பாலிட்டிக்ஸ்சை கையில் எடுத்துள்ளார்.
2.5 ஆண்டுகள் வழங்க வேண்டும்
மகாராஷ்டிராவில் மேயர் விவகாரம் இழுபறியாக சென்று கொண்டு இருக்க கூடிய சூழலில், இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "மும்பையில் மேயர் பதவி தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேவும், நானும் பேசி ஒருமித்த முடிவை எடுப்போம். இந்த விவகாரத்தில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்காது.
அனைத்தும் சுமூகமாக நடக்கும். அனைவரும் இணைந்து மும்பையை திறமையாக நிர்வகிப்போம்" என்று கூறியுள்ளார். சிவசேனா 2.5 ஆண்டுகள் கேட்பது மட்டும் இன்றி முதல் 2.5 ஆண்டுகள் தங்களுக்கும் அடுத்த 2.5 ஆண்டுகளே பாஜகவிற்கும் வழங்க வேண்டும் என்று டிமாண்ட் வைத்துள்ளது. பாஜகவிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications