முதுகில் குத்தாமல் முதல்வர் பதவியை தந்துவிடுங்க.. பாஜகவை எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியைத் தந்துதான் ஆக வேண்டும் என்று பாஜகவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ஶ்ரீசத் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் பாஜகவோ ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவிதான் தர முடியும் என பிடிவாதம் பிடிப்பதால் மகாராஷ்டிராவில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ஆனால் இந்த கூட்டணியில் முதல்வர் பதவி விவகாரத்தால் ஆட்சி அமைக்க முடியவில்லை. பாஜகவைப் பொறுத்தவரை அதிக இடங்களைக் கைப்பற்றியதால் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் நிதிஷ்குமார் குறைந்த இடத்தில் வென்ற போதும் முதல்வர் பதவியை தந்த பீகார் பார்முலாவை ஏன் மகாராஷ்டிராவில் அமல்படுத்தக் கூடாது என்கிறார் ஏக்நாத் ஷிண்டே. இதனால் பாஜக- சிவசேனா இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ஏற்க முடியாமல் போனால் அவர் மத்திய அமைச்சராகலாம் என பாஜக வாய்ப்பு தந்துள்ளது என்றார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனாவின் சஞ்சய் ஶ்ரீசத், ராம்தாஸ் அத்வாலேயின் கருத்துகளை நாங்கள் சீரியசாக எடுத்துக் கொள்வதே இல்லை. சட்டசபை தேர்தலின் போது சிவசேனாவுக்குதான் முதல்வர் பதவி என வாக்குறுதி கொடுத்ததே பாஜகதான். இப்போது பாஜகவே வாக்குறுதியை மீறுவது எப்படி சரியாக இருக்க முடியும்? எங்களைப் பொறுத்தவரை முதல்வர் பதவிதான் தேவை. ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பதவியை ஏற்க மாட்டார் என்றார்.
முன்னதாக மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. புதிய ஆட்சி அமைக்கப்படாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலைமை உருவானது. இதனைத் தவிர்க்க முதல்வர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு இடைக்கால முதல்வராக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications