இடஒதுக்கீடு குறித்து கருத்து.. ராகுல் நாக்கை வெட்டினால் ரூ.11 லட்சம்! காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
மகாராஷ்டிரா: சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி இடஒதுக்கீடு குறித்து பேசியிருந்தார். இவரது கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், எனவே ராகுலின் நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.11 லட்சம் கொடுப்பதாகவும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனாவின் எம்எல்ஏ அறிவித்திருந்தார்.
அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றியிருந்தார். அப்போது இந்தியாவில் இடஒதுக்கீடு எப்போது முடிவுக்கு வரும் என்று கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "இந்தியா அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும். இப்போது இந்தியா நியாயமான இடமாக இல்லை" என்று கூறியிருந்தார்.

ஆனால் இந்த கருத்து வலதுசாரி ஆதவாளர்களால், சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது. ராகுல் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியதாக பாஜக மற்றும் அது சார்ந்த கட்சியினர் கொந்தளித்துள்ளனர்.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சார்ந்துள்ள, சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், ராகுல் மீது சரமாரியாக விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். மட்டுமல்லாது ராகுலின் நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.11 லட்சம் கொடுப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.
அவர் பேசியதாவது, "தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ராகுல் காந்தி பேசியுள்ளார். இது காங்கிரஸின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இடஒதுக்கீட்டை இயல்பாகவே எதிர்க்கும் மனநிலையை இது காட்டுகிறது. இப்படி பேசிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சத்தை சன்மானமாக அளிக்கிறேன்.
ஏனெனில் ராகுல் கருத்து மக்களுக்கு துரோகமிழைத்துள்ளது. மராத்தியர்கள், தங்கர்கள் மற்றும் ஓபிசிக்கள் போன்ற சமூகங்கள் இடஒதுக்கீட்டிற்காக போராடுகின்றன. ஆனால் ராகுல் காந்தி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசியுள்ளார்.
ராகுல் காந்தி அரசியல் சாசனப் புத்தகத்தைக் காட்டி, பாஜக அதை மாற்றும் என்று பொய் கூறி வந்தார். உண்மையில் காங்கிரஸ்தான் நாட்டை 400 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான விஜய் வடேட்டிவார், சஞ்சய் கெய்க்வாட்டின் கருத்து முட்டாள்தனமானது என்றும், இதுபோன்ற கருத்துக்களை கூறுவது சட்டத்திற்கு எதிரானது என்றும் இதற்காக இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே கூறுகையில், "சஞ்சய் கெய்க்வாட் அரசியலில் இருக்கவே தகுதியற்றவர். இவரை மகாராஷ்டிராவின் துணை முதல்வர் ஃபட்னாவில் பாதுகாக்க விரும்புகிறாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த விவகாரம் பெரியதாக வெடித்துள்ள நிலையில், பாஜக இந்த கருத்து குறித்து பெரியதாக எதையும் வாய் திறக்கவில்லை. குறிப்பாக, சஞ்சய்க்கு பாஜக சப்போர்ட் செய்யவில்லை. சஞ்சய் கருத்து குறித்து பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இடஒதுக்கீடு முன்னேற்றத்தை, பாதிக்கும் என்று கூறி அதை எதிர்த்ததை நாம் மறந்துவிட முடியாது. இடஒதுக்கீடு வழங்குவது என்பது முட்டாள்களை ஆதரிப்பது என்று ராஜீவ் காந்தி கூறினார். இப்போது ராகுல் காந்தி, இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாக கூறுகிறார். இதை அனைத்தையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications