பசிக்கும்ல.. தவெக சேர்ந்த ஜோரில் ஸ்நாக்ஸ் பையுடன் வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்.. கலகலக்கும் கரூர்!
கரூர்: கரூரில் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் இன்று பங்கேற்கும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வோருக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் ஸ்நாக்ஸ் பை, இருக்கையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஸ்நாக்ஸ் பைகளில், ஒரு லட்டு, ஒரு 'குட் டே' பிஸ்கட் பாக்கெட், ஒரு மிக்சர் பாக்கெட், ஒரு தண்ணீர் பாட்டில் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கும் 5,000 பேருக்கும் இந்த ஸ்நாக்ஸ் பைகள் இருக்கைகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக இன்று கரூர் செல்லும் விஜய், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை வழங்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல், பொதுமக்களையும் சந்தித்து உரையாற்றுகிறார்.
கரூர் - சேலம் சாலையில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான அட்லஸ் விளையாட்டு மைதானத்தில் 6 ஏக்கர் பரப்பளவில், சுமார் 5000 பேர் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இந்த விழாவில் கலந்துகொள்ள க்யூஆர் கோடு அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வையொட்டி, மைதானத்தைச் சுற்றி சுமார் 10 அடி உயரத்திற்கு தகர கொட்டகைகள், தற்காலிக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விழாவைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணியளவில் கரூர் - சேலம் புறவழிச்சாலையில் இருந்து கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, உழவர் சந்தை, திருமாநிலையூர் வழியாக சுங்கச்சாவடி, தான்தோன்றிமலை ஆகிய பகுதிகள் வழியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்கிறார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி, கரூரில் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறமும் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு பல்வேறு அரசு துறைகளில் பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார்.
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மனவாசி ஊராட்சியில் ரூ. 1700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் Evervan Kothari Footwear Private Limited என்ற புதிய தனியார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு முதலமைச்சர் விஜய் கரூர் செல்லும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 78 பேர் கரூரில் முகாமிட்டுள்ளனர். இது தவிர கரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் சுமார் 6,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விஜய் இன்று பங்கேற்கும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வோருக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் ஸ்நாக்ஸ் பை, இருக்கையிலேயே வைக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்நாக்ஸ் பைகளில், ஒரு லட்டு, ஒரு 'குட் டே' பிஸ்கட் பாக்கெட், ஒரு மிக்சர் பாக்கெட், ஒரு தண்ணீர் பாட்டில் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கும் 5,000 பேருக்கும் இந்த ஸ்நாக்ஸ் பைகள் இருக்கைகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, விஜய் பங்கேற்ற கூட்டங்களில் தண்ணீர் பாட்டில்கள் கூட கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. விஜய்யை பார்க்க நீண்ட நேரம் காத்திருந்த பலர் மயக்கமடைந்தனர். இந்நிலையில், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் தற்போது தண்ணீர் பாட்டில்களுடன் ஸ்நாக்ஸ் பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications