அது வேற எதுக்கு 6 மாசம்? பரஸ்பர பிரிவுக்கு 6 மாதம் காத்திருப்பு தேவையில்லை: உடனே டைவர்ஸ் தந்த கோர்ட்
மும்பை: மும்பை ஹைகோர்ட்டில் நடந்த விவாகரத்து வழக்கின் தீர்ப்பில், நீதிபதி சொன்ன கருத்துக்கள் பலரது கவனத்தையும் பெற்று வருகின்றன.
புனேவை சேர்ந்த அந்த தம்பதிக்கு, கடந்த 2021ல் திருமணம் நடந்துள்ளது.. கணவருக்கு இப்போது 29 வயதாகிறது.. மனைவிக்கு 28 வயதாகிறது.. இருவருமே நன்றாக படித்தவர்கள். இருவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்.. கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.

தனித்தனி வாழ்க்கை: ஆனால், கல்யாணமாகி 1 வருடத்துக்குள்ளாகவே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.. இதனால், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2 பேரும் தனித்தனியாக வாழ துவங்கினார்கள்.
தகராறு அடிக்கடி வந்துபோனாலும், தம்பதி இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்றே குடும்பத்தினர் நம்பினார்கள்.. ஆனால், ஆளுக்கு ஒருபக்கம் தனியாக பிரிந்து சென்றுவிட்டதால், கவலைக்குள்ளானார்கள். அதனால் 2 பேரையும் சேர்த்துவைக்க குடும்பத்தினர் முயற்சிகள் எடுத்தனர். ஆனால், எந்த பலனையும் அது தரவில்லை.
கடைசியில், டைவர்ஸ் செய்வது என்று தம்பதி இருவரும் முடிவு செய்தார்கள்.. இதற்காக புனே குடும்ப நல நீதிமன்றத்தில் மனமொத்து இருவரும் பிரிவதாக சொல்லி, மனுத்தாக்கல் செய்தார்கள்..
டைம் வேண்டாம்: அந்த மனுவில், "20 மாதங்களாகவே நாங்கள் தனியாக வசித்து வருகிறோம்.. இப்போதுவரை விவாகரத்து முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுக்கு காத்திருப்பு காலம் எதுவும் தேவையில்லை.. 13 B(2) சட்டப்பிரிவை பயன்படுத்தி, காத்திருப்பு காலத்தை ரத்து செய்துவிட்டு, உடனடியாக விவாகரத்து வழங்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர்.
ஆனால், இவர்களது கோரிக்கையை கோர்ட் ஏற்கவில்லை.. விவாகரத்துக்கு 6 மாதம் காத்திருக்கும்படி சொல்லி உத்தரவிட்டுவிட்டது. இதனால், தம்பதி இருவரும் மும்பை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார்கள்.
அப்பீல் மனு : இந்த மனுவானது நீதிபதி கெளரி கோட்சே முன்பு விசாரணைக்கு வந்தது.. தம்பதி 2 பேரிடமும், தனிப்பட்ட முறையில் நீதிபதி பேசிப்பார்த்தார்... அவர்கள் இருவருமே விவாகரத்தில் உறுதியாக இருந்ததுடன், காத்திருப்பு காலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தம்பதி சொன்ன காரணத்தையும் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.. அதில், "வழக்கமாக, விவாகரத்து வழக்கில் கணவர், மனைவி என்று எந்த தரப்புக்கும் அநீதி இழைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், மறுடிபயும் தும்பதி சேர்வதற்கான வாய்ப்பை அவர்கள் தவறவிடக்கூடாது என்பதற்காகவும்தான் விவாகரத்து கேட்கும் தம்பதி 6 - 18 மாதங்கள் வரை காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மனு தாக்கல்: ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை, பரஸ்பர சம்மதத்தின் மூலம் தம்பதி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து, பிரிந்து செல்வதற்கான உறுதியான முடிவையும் எடுத்துள்ளனர். இது அவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடிவு செய்திருப்பதைக் காட்டுகிறது.. மறுவாழ்வுக்கான எல்லா வாய்ப்புகளும் அவர்களுக்கு இருக்கவே செய்கின்றன.
காரணம், மனுதாரர்கள் 2 பேருமே நல்ல நிலையில் இருக்கிறார்கள்.. அவர்களால் இனி சேர்ந்து வாழவே முடியாது என்று தெரிந்துதான் பிரிவது என்று ஒருமித்து முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், இனியும் காலவிரயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், அவர்கள் மனவேதனையைப் போக்கும் விதமாகவும், மனுதாரர்களுக்கு உடனடியாக விவாகரத்து வழங்கப்படுகிறது" என்று நீதிபதி தெரிவித்தார்.
பரபரப்பு தீர்ப்பு: 13 B(2) சட்டப்பிரிவின் அடிப்படையில் தம்பதி 6 மாதம் காத்திருக்காமல், உடனே விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இதுபோலவே சுப்ரீம் கோர்ட்டிலும் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. 7 ஆண்டுகளாக நீடித்த விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் இந்த பரபரப்பு தீர்ப்பை அறிவித்திருந்தனர்..
குற்றங்கள்: சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பு குறிது சொன்னபோது, "சமூகத்தில் மாற்றங்கள் நடக்க நேரம் எடுக்கும்.. ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது சில நேரங்களில் எளிதாக இருக்கலாம் .. அதேநேரம் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள சமூகத்தை வலியுறுத்துவது கடினமாக இருக்கும்..
திருமண உறவில் விருப்பம் இல்லாத தம்பதிகள் 6 மாத காலம் விவாகரத்திற்கு காத்திருக்க அவசியம் இல்லை.. பரஸ்பரம் பிரிய விரும்பும்பட்சத்தில் விவாகரத்து பெற முடியும்
இதுபோன்ற திருமணத்தின் மீள முடியாத முறிவு என்னும் பட்சத்தில், 142வது பிரிவின் கீழ் விவாகரத்து வழங்க சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது.. அதேசமயம், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின்போது பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து பெற 6 மாதங்கள் கட்டாய காத்திருப்பு காலம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படலாம்" என்று தீர்ப்பளித்திருந்தனர்.
விவாதம்: ஏறத்தாழ 7 ஆண்டுகளாக இந்த வழக்கு குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருந்தது பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. அதுபோலவே, மும்பை ஹைகோர்ட்டிலும், 13 B(2) சட்டப்பிரிவின் அடிப்படையில் தம்பதி 6 மாதம் காத்திருக்காமல், உடனே விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்திருப்பது பெருத்த கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications