மகாராஷ்டிரா தேர்தல்.. சீட் பகிர்வில் மகா இழுபறி! காங்கிரஸுடன் மோதும் உத்தவ் சிவசேனா
மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சீட் பகிர்வில் இழுபறி நீடித்துள்ளது.
இந்தியாவில் மிக முக்கிய அரசியல் செயல்பாடுகளை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. இம்மாநிலத்தில் தற்போது வரை சிவசேனாதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒரு காலத்தில் உத்தவ் தாக்ரே தலைமையில் ஓரணியாக இருந்த சிவசேனா, இப்போது ஏக்நாத் ஷிண்டே அணி, உத்தவ் அணி என இரண்டாக பிரிந்திருக்கிறது. மறுபுறம், தேசியவாத காங்கிரஸும் சரத்பவார் அணி, அஜித் பவார் அணி என பிரிந்து இருக்கிறது.

இந்த பிரிவுக்கு பாஜக அரசியலே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தற்போது ஏக்நாத் ஷிண்டே அணி+அஜித் பவார் அணி+பாஜக கூட்டணி மகாராஷ்டிராவை ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாதம் 20ம் தேதி இம்மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தவ் தாக்ரே தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என சிவசேனா (UBT) தலைவர் அனில் பரப் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
ஆனால் காங்கிரஸுடன் மோதல் போக்கு இருப்பதால், தொகுதி பங்கீட்டில் இழபறி நீடித்திருக்கிறது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவரான நானா பட்டேலுடன், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில், உத்தவ் தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக சிவசேனா கடும் அதிருப்தியிலிருக்கிறது.
"நானாவின் அணுகுமுறை சரியல்ல. அவர் தன்னை பெரிய தலைக்கட்டு போல நினைத்துக்கொள்கிறார். கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். எங்களுக்கு காங்கிரஸுடன் எந்த பிரச்னையும் இல்லை" என்று சிவசேனா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 260 தொகுதிகளில் மகா விகாஸ் கூட்டணி உடன்பாட்டை எட்டி இருக்கிறது. அதன்படி அதிகபட்சமாக காங்கிரஸ் 115 தொகுதிகளும், உத்தவ் அணி 85 தொகுதிகளிலும், சரத்பவார் அணி 75 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பேச்சு அடிபட்டது.
ஆனால், காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்பதால் சிவசேனா அதிருப்தியடைந்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸின் மகாராஷ்டிரா பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா, உத்தவ் தாக்ரேவை அவரது இல்லத்தில் சந்தித்து சமாதானம் பேசியுள்ளார். எனவே விரைவில் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியிலும் சீட் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications