மாமியாருக்கு மறக்க முடியாத பரிசு.. கணவன் மீது மனைவி தொடர்ந்த விசித்திர வழக்கு.. கோர்ட்டில் ட்விஸ்ட்
மும்பை: என் கணவர் எப்போதுமே தாயுடன் நேரத்தை செலவிடுகிறார் எனறும், தாய்க்குத்தான் பணத்தையும் செலவிடுவதாகவும், கூறி குடும்ப வன்முறை பிரிவில் கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி ஒருவர் மும்பை நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடர்ந்தார்.. அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இப்போது பார்ப்போம்.
பொதுவாக மாமியார் மருமகள் சண்டை என்பது இந்தியாவில் பல ஆண்டுகளாக இருக்கிறது. பல வருடங்களாக தன் சொல்படி செயல்பட்டு வந்த மகன், திடீரென நேற்று வந்த மனைவியின் பேச்சைக் கேட்டு செயல்பட தொடங்குவதால், அம்மாக்களுக்க கோபம் வருகிறது.. அதேபோல் திருமணம் ஆன பின்னரும் அம்மா பேச்சையே கேட்டு மகன் செயல்பட்டால் மனைவிக்கு கோபம் வருகிறது.

மொத்தத்தில் மகனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அம்மாக்களும், கணவனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மனைவிகளும் செயல்படுகிறார்கள். இப்படி நடந்து கொள்வதால் கீரி பாம்பு போல் இருவரும் மாறி மாறி சண்டையிட்டு கொள்வது பல குடும்பங்களில் நடக்கிறது.
அம்மாவிற்கு ஆதரவாக நடந்து கொண்டால் மனைவிக்கு பிடிப்பது இல்லை.. மனைவிக்கு ஆதரவாக நடந்து கொண்டால் அம்மாவிற்கு பிடிப்பது இல்லை. இரண்டு பேரையும் சமமாக கொண்டு செல்ல முயலும் ஆண், கடைசியில் இரண்டு பக்கமும் கெட்ட பெயர் தான் எடுக்கும் நிலை இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் பலர் பெரும்பாலும் அம்மாக்களை கைவிட்டு மனைவி பக்கம் முழுயைமாக போய்விடுகிறார்கள்..
படித்த பெண்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக கேள்விகளை எழுப்புவதால், பதில் சொல்ல முடியாமல் மனைவி பக்கம் முழுமையாக சாயும் நிலை தமிழகத்தில் பல ஆண்களுக்கு ஏற்படுகிறது. அதேநேரம் அம்மாக்களும் தங்கள் மகனை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் வெற்றி பெற்று, மருமகளை அடிமை போல் நடத்தும் சம்பவங்களும் பல இடங்களில் நடக்கிறது.
குறிப்பாக வடமாநிலங்களில் உள்ள பல வீடுகளில், மாமியார்கள் சொல்வது தான் சட்டம் என்கிற அளவில் நிலைமை இருக்கிறது. இந்நிலையில் ஒரு பெண் தன் கணவர்,வெளிநாட்டில் இருந்து வந்தால் தாயுடன் தான் அதிக நேரம் செலவிடுகிறார். அம்மாவிறகுத்தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்று கூறி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்..
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அரசு செயலகத்தில் உதவியாளராக பணிபுரியும் பெண் ஒருவர் தொடர்ந்த மனுவில், நான் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே என் கணவனிடம் இருந்து பாதுகாப்பு, நிதியுதவி, இழப்பீடு வேண்டும். என் கணவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், அவர் விடுமுறையில் வீட்டிற்கு வரும் போது, அவரின் தாயுடன் நேரத்தை செலவிடுகிறார்.
தாய்க்குத்தான் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புகிறார். இதனால் மாமியார் மற்றும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அடக்குமுறையை ஏவி துன்புறுத்துகிறார்கள். எனவே கணவர் குடும்பத்தினர் மீது குடும்ப வன்முறை சட்டத்தில் வழக்குபதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதனிடையே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அவரின் குடும்ப உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து விட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை கூடுதல் அமர்வு நீதிபதி ஆஷிஷ் அயாசித், தனது தாய்க்கு நேரத்தையும், பணத்தையும் செலவிடுவதை குடும்ப வன்முறையாக கருத முடியாது என்று தீர்ப்பில் கூறினார். அதனுடன், அந்த பெண் தெரிவித்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், மனுதாரர் வேலையில் இருப்பவர், மாத ஊதியம் பெறுகிறார் என்பதையும் சுட்டிக்காட்டிக் அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications