அன்று கதறி அழுதாரே.. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் முடிவுகளை துல்லியமாக கணித்த எக்ஸிட் போல் எது தெரியுமா?
மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஒருவழியாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இது தவிர பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடந்தன. இந்த தேர்தலில் கிட்டதட்ட அனைத்து கட்சிகளுமே எதாவது ஒரு வகையில் வெற்றி பெற்றன. அதேநேரம், எக்ஸிட் போல்கள் என்று வரும் போது பல்வேறு நிறுவனங்களின் கணிப்புகளும் பொய்யாகவே போனது. இந்த முறை தேர்தல் முடிவைத் துல்லியமாகக் கணித்த எக்ஸிட் போல்கள் எது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ளன. இதில் இரு மாநிலங்களிலுமே ஆளும் தரப்பே ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஜார்க்ண்ட் மாநிலத்தில் ஆளும் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கருத்துக்கணிப்பு: பொதுவாகத் தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு சமயத்தில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளக் கருத்துக்கணிப்புகள் உதவும். அதிலும் தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளைக் காட்டிலும் எக்ஸிட் போல் கணிப்புகள் சரியாகவே இருக்கும். இந்த முறையும் நமது மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலுக்கு பல்வேறு நிறுவனங்களும் தங்கள் எக்ஸிட் போல் கணிப்புகளை வெளியிட்டு இருந்தன. இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்களால் மக்களின் மனதில் என்ன இருந்தது என்பதை துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை.
பல நிறுவனங்கள் இரண்டு மாநிலங்களில் ஒன்றின் முடிவைத் துல்லியமாகக் கணித்த போதிலும், இரண்டையும் கணிக்க முடியவில்லை. அதேநேரம் பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பு மட்டும் இரு மாநில தேர்தல் முடிவுகளையும் சரியாகக் கணித்து இருந்தது.
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 49- 59 இடங்களிலும், பாஜக கூட்டணி 17-27 இடங்களிலும் இதர கட்சிகள் 1-6 இடங்களிலும் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல்களில் கூறப்பட்டு இருந்தது. இது தேர்தல் முடிவுகளை அப்படியே எதிரொலிப்பதாக இருந்தது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களிலும் பாஜக கூட்டணி 24 இடங்களிலும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் வென்று இருந்தன.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பாஜகவினரே இவ்வளவு பெரிய வெற்றி தங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பெரும்பாலான எக்ஸிட் போல்களில் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. சில சர்வேக்களில் தொங்கு சட்டசபை கூட அமையலாம் எனக் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பு தான் தேர்தல் முடிவுகளுக்கு கிட்டதட்ட நெருக்கமாக வந்து இருந்தது. பாஜக கூட்டணி 178- 200 இடங்களிலும் எதிர்க்கட்சி கூட்டணி 82-102 இடங்களிலும் இதர கட்சிகள் 6- 12 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டு இருந்தது. தேர்தல் முடிவுகள் கிட்டதட்ட இதே டிரெண்டை ஒத்து இருந்தது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 235 இடங்களில் வென்றிருந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களில் வென்றது.. அதேபோல இதர கட்சிகள் 4 இடங்களில் வென்றன.
கதறி அழுதாரே: ஆக்ஸிஸ் மை இந்தியா அமைப்பு கடந்த காலங்களிலும் பல தேர்தல் முடிவுகளைத் துல்லியமாகக் கணித்துள்ளன. இருப்பினும், லோக்சபா தேர்தலில் அவர்களின் எக்ஸிட்போல் மொத்தமாகத் தவறாக இருந்தது. இந்தளவுக்குத் தவறாகப் போனதால் அந்த அமைப்பின் தலைவர் பிரதீப் குப்தா ஆங்கில டிவி சேனலில் நேரலையிலேயே அழுது இருந்தார். இது அப்போது பெரியளவில் டிரெண்டாகி இருந்தது. அதற்குப் பரிகாரம் தேடும் வகையில் இந்த தேர்தல் முடிவுகளைத் துல்லியமாகக் கணித்துள்ளது ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பு.












Click it and Unblock the Notifications