செம ஆச்சரியம்.. எரிகல் தாக்கி உருவான ஏரி இளஞ்சிவப்பாக மாறியது.. மகாராஷ்டிராவில் குவியும் ஆய்வாளர்கள்
நாக்பூர்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மகாராஷ்டிராவிலுள்ள பிரபலமான ஏரி, திடீரென இளஞ்சிவப்பு வண்ணமாக மாறியுள்ளது, இதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் குழு விரைகிறது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புல்தானா மாவட்டத்தில் உள்ளது பிரபலமான, லோனார் ஏரி.
பிரபலமான என்று கூற ஒரு பெரிய காரணம் உண்டு. இது மற்ற ஏரிகளை போல தோன்றியது கிடையாது. இன்றோ நேற்றோ உருவானதும் கிடையாது.
ஒரு 'நீஈஈஈஈண்ட' வராலாறு இதற்கு உண்டு.

50,000 ஆண்டுகள் பழமையான ஏரி
ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் பூமியை தாக்கியபோது, உருவானதுதான் இந்த லோனார் ஏரி. எனவேதான், இந்த ஏரி, ஒரு பிரபலமான சுற்றுலா மையமாகவும், உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகளை ஈர்க்கும் மையமாகவும் விளங்கி வருகிறது.
தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னமாகவும் இந்த ஏரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோதாது என்று, புதிதாக ஒரு கவன ஈர்ப்புக்கும் காரணமாகியுள்ளது லோனார் ஏரி.
இளஞ்சிவப்பு வண்ணம்
திடீரென ஏரி தண்ணீர், இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது. 1.2 கி.மீ சராசரி விட்டம் கொண்ட, இந்த ஏரி நீரின் நிறத்தில் ஏற்பட்ட மாற்றம், உள்ளூர் மக்களை மட்டுமல்ல, இயற்கை ஆர்வலர்களையும் விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆய்வாளர்கள், அங்கு குவிந்துள்ளனர்.

அதிக சிவப்பு கலர்
நிற மாற்றம் நிகழ்ந்தது இது முதல் முறை அல்ல என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த முறை இது மிகவும் அதிக சிவப்பு கலராக காணப்படுகிறது. இந்த ஏரியில் 10.5 பிஹெச் உப்பு கரைசல் உள்ளது என்று லோனார் ஏரி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் கஜனன் காரத் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

உப்புத் தன்மை காரணம்
"நீர்நிலையில் பாசிகள் உள்ளன. இந்த மாற்றத்திற்கு உப்புத்தன்மை மற்றும் பாசிகள் காரணமாக இருக்கலாம்" என்று அவர் மேலும் கூறினார். "ஏரியின் நீர் மேற்பரப்பில் ஒரு மீட்டருக்குக் கீழே ஆக்ஸிஜன் இல்லை. ஈரானில் இதேபோல நிறம் மாறும் ஒரு ஏரி உள்ளது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. உப்புத்தன்மை அதிகரிப்பதால் நீர் சிவந்து போகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

மழை குறைவு
கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது லோனார் ஏரியின் நீரின் அளவு தற்போது குறைவாக உள்ளது என்றும் அதில் புதிய தண்ணீரை சேர்க்கும் அளவுக்கு போதிய மழை இல்லை. குறைந்த அளவிலான நீர் இருப்பால், வளிமண்டல மாற்றங்கள் காரணமாக உப்புத்தன்மை மற்றும் பாசியின் மாற்றம் போன்றவை வண்ண மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க கூடும், என்று கஜனன் காரத் கூறினார். லாக்டவுன் இருப்பதால், மக்கள் யாரும் ஏரி பக்கம் போகவில்லை. எனவே தண்ணீர் இப்படி மாறிவிட்டதாக சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விஞ்ஞானிகள் ஆய்வு
இதனிடையே, நாக்பூரைச் சேர்ந்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நீரி) விஞ்ஞானிகள் குழு அடுத்த வாரம் லோனார் ஏரிக்குச் சென்று அதன் நீர் மாதிரிகளை சேகரித்து அது ஏன் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்பதை ஆய்வு செய்யவுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications