நர்சிங் மாணவி பலாத்காரம்.. போதை மருந்து கொடுத்து ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்! மகாராஷ்டிராவில் கொடூரம்
மும்பை: கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமே இன்னும் ஆறாத வடுவாக மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், மகாராஷ்டிராவில் நர்சிங் பயிற்சி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடிக்கும் தண்ணீரில் போதைப் பொருளை கலந்து கொடுத்து ஆட்டோ டிரைவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கியது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவம் மக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. 19 வயதே ஆன நர்சிங் பயிற்சி மாணவியை, ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார். குடிக்கின்ற தண்ணீரில் போதைப் பொருளை கலந்து கொடுத்து ஆட்டோ டிரைவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் பயிற்சி மாணவி, தனது பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பயிற்சி நர்சிங் மாணவிக்கு தாகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவரிடம் தண்ணீர் கேட்டிருக்கிறார். ஆனால் வக்ர புத்தி கொண்ட அந்த ஆட்டோ டிரைவர் தண்ணீரில் போதைப் பொருளை கலந்து கொடுத்துள்ளார்.
அந்த மாணவியும் குடிநீர் தான் என்று குடித்துள்ளார். போதைப் பொருள் கலந்து இருப்பது தெரியாமல் குடித்த அந்த பயிற்சி நர்ஸ், சற்று நேரத்தில் சுய நினைவை இழந்தார். இதையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பயிற்சி நர்சை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார். சுயநினைவு திரும்பிய பிறகு தனக்கு நேர்ந்த கொடூரத்தை உணர்ந்த பயிற்சி நர்ஸ், வீட்டிற்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், படு பாதக செயலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் யார் என்றும், அவரை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக குற்றவாளியை கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதேபோல் அந்த மாணவியுடன் பணிபுரிந்த நர்சுகளும் உள்ளூர் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். பயிற்சி நர்ஸ் பாலியல் பலாத்காரத்தை கண்டித்து நடந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கொல்கத்தாவில் மருத்துவமனையில் இரவு பணியில் ஈடுபட்டிந்த பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடே ஆறாத நிலையில் தற்போது அது மாதிரியான ஒரு சம்பவம் நடந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications